சுற்றுச்சூழலில் ஆர்வம் காட்டும் பல் மருத்துவர்
விவசாயியின் மகளான இவர், சிறு வயதில் இருந்தே பசுக்களுக்கு தீவனம் வழங்குவதில் ஆர்வம் காட்டுவார். இது மட்டுமின்றி கழிவுகளை உரமாக மாற்றும் வழிமுறையையும் தெரிந்து வைத்திருந்தார்.தான் வசிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே குப்பை, குவியல்களை பார்த்தார். தன் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் கழிவுகளை உரமாக்கும் முயற்சியை துவக்கினார். இதற்கு இப்பகுதியில் வசிக்கும் சிலரும் ஆதரவு தெரிவித்தனர்.இதற்காக, 'எச்.எஸ்.ஆர்., லே -- அவுட் சிட்டிசன் போரம்' என்ற அமைப்பை உருவாக்கினார். இயற்கை கழிவுகளை மட்டுமே உரமாக்க திட்டம் வகுத்தார். இது பற்றி, பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவ்வேளையில், திடக்கழிவு மேலாண்மை நிபுணர் கமிட்டி அல்மித்ரா பாட்டீல் நட்பு கிடைத்தது. அவர் மூலம், பெல்லந்துாரின் முக்தி குழுவினர் அறிமுகம் கிடைத்தது.அவர்களின் 2பின்1பேக்' எனும் 2 பிளாஸ்டிக் தொட்டி, ஒரு பை என்ற திட்டம் சாந்தியை கவர்ந்தது. தன் சொந்த செலவில் 1,000 செட் பேக், பை வாங்கி, தான் வசிக்கும் பகுதி மக்களுக்கு வழங்கி, குப்பைகளை பிரிக்கும் வழிமுறைகளை விளக்கினார்.தற்போது தினமும் 20,000 கிலோ ஈர குப்பைகள் உரமாக்கப்படுகிறது. 2,000 கிலோ குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு உலர் கழிவு சேகரிப்பு மையத்துக்கு அனுப்புகிறார். நாள் ஒன்றுக்கு 500 கிலோ சுகாதார கழிவுகள், அறிவியல் பூர்வமாக எரிக்கப்படுகின்றன.இவரின் முயற்சியால், ஹெச்.எஸ்.ஆர்., லே -- அவுட் பகுதியில் 90 சதவீத குப்பைகள் பிரிக்கப்படுகின்றன. மேலும் ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் வார்டு திடக்கழிவு மேலாண்மை வட்ட மேஜை மாநாடு கமிட்டி உறுப்பினராக உள்ளார். இவரின் சேவையை பாராட்டி, 2019ல் 'சாதனை பெண்கள்' விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்று உள்ளார்.இது குறித்து சாந்தி கூறியதாவது:எங்களின் பணிக்கு மாநகராட்சி, குடியிருப்போர் நல சங்கத்தினர், வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். சூப்பர் மார்க்கெட்களுக்கு செல்லும் பொது மக்கள், கையில் பைகளை கொண்டு செல்வதும்; ஹோட்டல்களுக்கு செல்வோர் பாத்திரங்கள் கொண்டு செல்வதை பார்க்கும் போது, மகிழ்ச்சி அளிக்கிறது.இதனால், குப்பை கழிவுகள் குறைகிறது. இது பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதில் மகிழ்ச்சியாக உள்ளது. கண்ட கண்ட இடங்களில் குப்பை கொட்டுவோர் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.சமூக சேவகர்கள் பலரும் சேலைகள், இனிப்புகள் வழங்கி வந்தனர். நாங்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க, உரம் தயாரிக்கும் கருவிகள் வழங்கினர். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓய மாட்டேன். அவதுாறு பரப்புவோரை கண்டுகொள்ள மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.