| ADDED : நவ 24, 2025 03:33 AM
கொப்பால்: சக்கர நாற்காலி இல்லாததால், அரசு மருத்துவமனையில் நோயாளியை, அவரது உறவினர் கைகளில் சுமந்து கொண்டு, மூன்றாவது மாடியில் இருந்து இறங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகள் இல்லை. சுகாதாரம் இல்லை. நோயாளிகள் புறக்கணிப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாமல், தரையில் படுக்க வைத்திருப்பது, ஒரே கட்டிலில் இரண்டு நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை அளிப்பது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இப்போது, அரசு மருத்துவமனைகளில், குறைந்தபட்சம் சக்கர நாற்காலி கூட இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொப்பால் அரசு மருத்துவமனையில், ஒரு பெண் நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். கட்டடத்தின் மூன்றாம் மாடியில் உள்ள வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காலை நோயாளிக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டது. டாக்டரிடம் கூறியும், அவர் மூன்றாவது மாடிக்கு வரவில்லை. நோயாளியை கொண்டு செல்ல சக்கர நாற்காலியும் அங்கு இருக்கவில்லை. இதனால் நோயாளியை உறவினர், தன் கைகளில் துாக்கிக் கொண்டு, மூன்றாவது மாடியில் இருந்து கீழே வேகமாக ஓடினார். இந்த காட்சியை கவனித்த சிலர், தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். பலரும் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உள்ளன ர். தங்களின் சிகிச்சைக்கு, அரசு மருத்துவமனைகளை மட்டுமே ஏழை, எளிய மக்கள் நம்பியுள்ளனர். இவர்களால் அதிகம் செலவிட்டு, தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெற முடியாது. ஆனால் அரசு மருத்துவமனைகளில், தேவையான வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.