டயாலிசிஸ் சிகிச்சைக்கு ஆதார் கார்டு கட்டாயம்
பெங்களூரு : கர்நாடக அரசு மருத்துவமனைகளில், 'டயாலிசிஸ்' சிகிச்சை பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:பிரதமர் தேசிய டயாலிசிஸ் திட்டம், சுவர்ண சுரக்ஷா டிரஸ்ட் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் பயனாளிகளுக்கு சிகிச்சைக்கு பணம் பரிமாற்றம் செய்ய, ஆதார் எண் அவசியம்.அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை பெற விரும்புவோர், ஆதார் அட்டை காண்பிப்பது கட்டாயம்.எந்த நோயாளியிடமாவது, ஆதார் கார்டு இல்லை என்றாலும், அவர்களுக்கு சிகிச்சை மறுக்கக் கூடாது.அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆதார் அட்டைக்கு மாற்றாக, வேறு ஆவணங்களை பெறலாம்.மாற்று ஆவணங்கள் பெற்று, சிகிச்சை அளிக்கும்போது, அதை பதிவு செய்ய தனி ரிஜிஸ்டர் இருக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்தும் ஏஜென்சி மூலமாக, விதிமுறைப்படி தணிக்கை செய்ய வேண்டும்.எந்த நபரிடமாவது ஆதார் அட்டை இல்லை என்றால், அவர் இதுவரை ஆதார் கார்டு பதிவு செய்திராவிட்டால், ஆதார் அட்டை பெற, அவர் விண்ணப்பிக்க வேண்டும்.ஒருவேளை குழந்தைகளாக இருந்தால், அவர்களின் பெற்றோர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களின் வீட்டு அருகில் ஆதார் பதிவு மையம் இல்லாவிட்டால், துறையின் திட்டத்தை செயல்படுத்தும் ஏஜென்சி மூலமாக விண்ணப்பிக்கலாம்.ஆதார் எண் கிடைக்கும் வரை, 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பிறப்பு சான்றிதழ், பள்ளி முக்கியஸ்தரின் கையெழுத்துள்ள அடையாள அட்டை தாக்கல் செய்ய வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோர், ஆதார் பெற பதிவு செய்துள்ள என்ரோல்மென்ட் எண் சீட்டு, வங்கி பாஸ் புத்தகம், பான் கார்டு உட்பட பத்து ஆவணங்களில் ஒன்றை தாக்கல் செய்து, சிகிச்சை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.