உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாலுார் முதன்மை சிவில் நீதிபதி மீது நடவடிக்கை

 மாலுார் முதன்மை சிவில் நீதிபதி மீது நடவடிக்கை

பெங்களூரு: காரை முந்தி சென்றதால் ஏற்பட்ட தகராறில், மூன்று பேரை கைது செய்ய வைத்ததன் மூலம், மாலுார் நீதிமன்றத்தின் முதன்மை சிவில் நீதிபதி காயத்ரி நடந்து கொண்ட விதம் ஆணவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பதிவாளருக்கு, நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டுள்ளார். கோலாரின் மாலுார் நீதிமன்றத்தில் முதன்மை சிவில் நீதிபதி காயத்ரி. இவர் கடந்த, 23ம் தேதி பணி முடிந்து காரில் வீட்டிற்கு சென்றார். காரை அவரே ஓட்டினார். காருக்கு பின்னால் கல்லுாரி மாணவர் வினய் பைக்கில் வந்தார். வழிகேட்டு ஹார்ன் அடித்தார். வழி கிடைக்காததால் காரை முந்தி சென்றார். ஒரு கட்டத்தில், போலீஸ் நிலையம் சென்ற காயத்ரி, சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின்படி வினய், கவிதா, வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவானது. மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு வக்கீல் சங்க தலைவர் விவேக் சுப்பாரெட்டி, கோலார் மாவட்ட நீதிமன்ற நிர்வாக விவகார பொறுப்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமாருக்கு எழுதிய கடிதத்தில், மாலுார் சிவில் நீதிபதி காயத்ரி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார் என எழுதியிருந்தார். இந்நிலையில் நீதிபதி கொடுத்த புகாரின்படி, தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி வினய், கவிதா, வெங்கடேஷ் ஆகியோர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி நாகபிரசன்னா நேற்று விசாரித்தார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெகதீஷ், நீதிபதி காயத்ரி நடந்து கொண்ட விதம் தொடர்பான வீடியோவை, நீதிபதி நாகபிரசன்னாவிடம் மொபைல் போனில் காண்பித்தார். நீதிபதி நாகபிரசன்னா பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: இந்த தெருச்சண்டை தேவையற்றது. பொதுமக்கள் நம்பிக்கையை நான்கு சுவர்களுக்குள் மட்டும் நீதிபதிகள் தக்க வைத்து கொண்டால் போதாது. அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்த வேண்டும். நீதிபதி என்பதற்காக காயத்ரி ஆணவம், கர்வத்துடன் நடந்து கொண்டது சரியல்ல. அவர் மீது நடவடிக்கை எடுக்க, இவ்விவகாரத்தை தலைமை நீதிபதி கவனத்திற்கு, பதிவாளர் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். மேலும் மனுதாரர்கள் மீது பதிவான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !