உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முதல்வர் பதவி மோதலை கண்டுக்காத பா.ஜ., மாநில பொறுப்பாளர் மீது தொண்டர்கள் கோபம்

 முதல்வர் பதவி மோதலை கண்டுக்காத பா.ஜ., மாநில பொறுப்பாளர் மீது தொண்டர்கள் கோபம்

பெங்களூரு: கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரசில், முதல்வர் பதவிக்கான மோதல் கொழுந்து விட்டு எரிகிறது. இதை சாதகமாக பயன்படுத்த வேண்டிய பா.ஜ., மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. கட்சியை வழி நடத்த வேண்டிய மாநில பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வால், மாநிலத்துக்கு வராததால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கர்நாடகாவில் தற்போது, எதிர்க்கட்சியான பா..ஜ.,வுக்கு சாதகமான அரசியல் அலை வீசுகிறது. முதல்வர் பதவிக்காக சித்தராமையாவும், சிவகுமாரும் மோதுவதால், அரசில் மட்டுமின்றி, காங்கிரசிலும் குழப்பம் உருவாகியுள்ளது. பொன்னான வாய்ப்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, மடாதிபதிகளும் தங்களின் ஆதரவு யாருக்கு என பகிரங்கமாக கருத்து தெரிவித்து எரியும் தீயில் நெய் வார்க்கின்றனர். ஆளும் கட்சியில் நிலவும் இந்த குழப்பங்கள் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன. மற்றொரு பக்கம், அரசின் வளர்ச்சி பணிகளும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, மக்களின் கவனத்தை தங்கள் வசம் திருப்ப, பா.ஜ.,வுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அதை பயன்படுத்தாமல், கட்சி மவுனமாக உள்ளது. கட்சிக்கு ஆலோசனைகள் கூறி வழி நடத்த வேண்டிய மாநில பா.ஜ., பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வால், கர்நாடகாவுக்கு வரவேயில்லை. கடந்தாண்டு ஜூலையில், இவர் மாநில பா.ஜ., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின், எப்போதாவது தான் மாநிலத்துக்கு வருகிறார். அவர் வருவதும் தெரிவதில்லை; போவதும் தெரிவதில்லை என, தொண்டர்கள் முணுமுணுக்கின்றனர். கட்சியின் மாநில பொறுப்பாளராக இருப்பவர், அவ்வப்போது மாநிலத்துக்கு வந்து, உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். தொண்டர்களின் பிரச்னைகளை கேட்டறிவது, கட்சியை பலப்படுத்துவது, காங்., அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது போன்றவற்றை செய்ய வேண்டும். ஆனால், ராதா மோகன்தாஸ் அகர்வால், இவற்றில் எதையும் செய்வதில்லை. ஆர்வம் மைனஸ் காங்கிரஸ் அரசில் நடக்கும் குழப்பங்கள், பா.ஜ.,வுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. ஆனால், மாநில தலைவர் விஜயேந்திரா, இந்த வாய்ப்பை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. எதிர்க்கட்சி தலைவர் அசோக், பெங்களூரில் மட்டுமே போராட்டம் நடத்துகிறார். இந்த போராட்டம் மக்களின் மனதில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் கூற வேண்டிய பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வாலும், இரண்டு மாதமாக மாநிலத்தை திரும்பி கூட பார்க்கவில்லை. அதுமட்டுமின்றி, பா.ஜ.,விலும் உட்கட்சி பூசல் உள்ளது. கட்சியை பலப்படுத்த தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இத்தனை நாட்களாக பீஹார் சட்டசபை தேர்தலை, மேலிட தலைவர்கள் காரணம் காட்டினர். இப்போது அங்கு தேர்தல் முடிந்துள்ளது. மாநில பொறுப்பாளர் வருகை தர வேண்டும் என, தொண்டர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ