சாலை விபத்தில் நடிகர் ஹரிஷ் பலி
குடகு: வேகமாக சென்ற கார், டேங்கர் மீது மோதியதில் நடிகர் ஹரிஷ் உயிரிழந்தார். குடகு மாவட்டம், குஷால்நகரின் ஹொஸ்கோட்டே கிராமத்தில் வசித்தவர் நடிகர் ஹரிஷ், 38. இவர் கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடிக்கிறார். படப்பிடிப்புக்கு சென்ற இவர், பணி முடிந்ததும் நேற்று முன்தினம் நள்ளிரவு, காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். குஷால்நகர் தாலுகாவின் ஆனேகாடு வனப்பகுதி அருகில், தேசிய நெடுஞ்சாலை - 275ல் வரும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரம் நின்றிருந்த டேங்கர் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் பலத்த காயமடைந்த நடிகர் ஹரிஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குஷால்நகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.