தர்ஷன் வாழ்க்கை பாழானது நடிகை ரம்யா வருத்தம்
பெங்களூரு : ''சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை விஷயத்தில், நடிகர் தர்ஷன் அவசரப்பட்டு, தன் வாழ்க்கையை தானே பாழாக்கி கொண்டார்,'' என நடிகை ரம்யா தெரிவித்தார். இது குறித்து, பெங்களூரில் அவர் அளித்த பேட்டி: திரையுலகில் நடிகர் தர்ஷனின் வளர்ச்சியை பார்த்து, மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் தன் அவசர புத்தியால், வாழ்க்கையை பாழாக்கி கொண்டார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு, நன்றி கூறுகிறேன். தர்ஷன் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்ட போது, எனக்கு மிகவும் வருத்தம், திருப்தி என, இரண்டும் ஏற்பட்டது. தர்ஷனுடன் தத்தா என்ற திரைப்படத்தில், நான் நடித்திருந்தேன். அவர் எனக்கு அறிமுகம் உள்ளவர். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவரின் வாழ்க்கை, இப்படி வீணானதே என்ற வருத்தம் ஏற்பட்டது. படங்களில் சேர்ந்து பணியாற்றிய போது, அவர் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, என்னுடன் பகிர்ந்து கொண்டார். லைட் பாயாக இருந்தவர், இந்த அளவுக்கு வளர்ந்ததை நினைத்து பெருமையாக இருந்தது. ஆனால் சமீபத்திய அவரது செயல் வருத்தம் அளிக்கிறது. அவரை சுற்றிலும் நல்லவர்கள் இல்லையோ என, தோன்றுகிறது. அவர் மேலும் உயரமான இடத்துக்கு வளர்ந்திருக்க வேண்டும். அதை அவரே பாழடித்துள்ளார். தர்ஷன் ரசிகர்களிடம் இருந்து, எனக்கு இப்போது தவறான கமென்ட் வருவது இல்லை. பலர் தங்களின் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டுள்ளனர். தர்ஷன் சிறைக்கு சென்றதால், அரசுக்கோ, திரையுலகுக்கோ எந்த நஷ்டமும் இல்லை. இவரை போன்ற ஸ்டார் நடிகர் சிறைக்கு சென்றால் திரையுலகுக்கு நஷ்டம் ஏற்படுமா. ஸ்டார் நடிகர்கள் படத்தில் இல்லையென்றால், படம் தோற்குமா. ஒரு படம் வெற்றியடைய, ஸ்டார் ஹீரோக்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திரைக்கதை நன்றாக இருந்தால், குடும்பமாக வருவர். தற்போது திரைக்கு வந்து வெற்றி பெற்ற சு பிரம் சோ படத்தில், எந்த ஸ்டார் நடிகர் இருந்தார். இதில் நடித்த அனைவரும் புதுமுகங்கள். கதை நன்றாக இருந்தால் படம் ஹிட் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.