நடிகை தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம்
பெங்களூரு: மைசூரு சாண்டல் சோப் நிறுவன துாதராக தேர்வு செய்யப்பட்ட நடிகை தமன்னாவுக்கு, மாநில அரசு 6.20 கோடி ரூபாய் ஊதியம் வழங்கியுள்ளது. சட்டசபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் சுனில் குமாரின் கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக மாநில அரசு அளித்த பதில்: மைசூரு சாண்டல் சோப் விளம்பரத்துக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில், 48 கோடியே 88 லட்சத்து 21,350 ரூபாய் செலவிடப்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் மார்க்கெட்டுகளில், மைசூரு சாண்டல் சோப் குறித்து விளம்பரம் செய்ய, துாதர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நடிகை தமன்னா, 2025 முதல் 2027 வரை மைசூரு சாண்டல் சோப் துாதராக இருப்பார். இதற்காக அவருக்கு 6.20 கோடி ரூபாய், மற்றொரு துாதரான நடிகை ஐஷானி ஷெட்டிக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர கர்நாடகாவின் பிரபலங்கள் நிமிகா ரத்னாகர், சீனிவாச மூர்த்தி, சான்யா அய்யர், ஆராதனா ஆகியோர் துார்தர்ஷன் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டனர். இதற்காக 62.87 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.