கூடுதலாக ரூ.1.12 வசூலித்த மருந்தகம்: வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
பெங்களூரு: மருந்தகத்தில் ஒரு மாத்திரையை குறைவாக கொடுத்ததுடன், கூடுதலாக 1.12 ரூபாய் பெற்ற மருந்தகம் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்த கர்நாடக உயர் நீதிமன்றம், புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்தது. பெங்களூரு ‘ஈடிவி’ கன்னட செய்தி தொலைக்காட்சி மூத்த செய்தியாளர் ஸ்ரீநாத் ஜோஷி, பெங்களூரு உதவி மருந்து கட்டுப்பாட்டாளருக்கு புகார் அளித்திருந்தார். அதில், 2016 ஆக., 23ல் மெட்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மாத்திரைகள் வாங்கினேன். அதில் எட்டு மாத்திரைகளுக்கு 40.32 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், மருந்தக உரிமையாளர், ஏழு மாத்திரைகள் மட்டும் கொடுத்து, கூடுதலாக 1.12 ரூபாய் வசூலித்துள்ளார் என்று புகார் அளித்திருந்தார். இதையடுத்து, அந்த நிறுவனம் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மெட்பிளஸ் நிறுவனமும், அதன் இயக்குனர் சீனிவாஸ், அதிகாரிகள் சுதாகர் ரெட்டி, ரங்கசாமி ஆகியோரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, ‘மருந்து விலை கட்டுப்பாடு உத்தரவு – 2013ன் 26வது பிரிவின் கீழ், இவ்வழக்கில் ஒரு குற்றத்தை உருவாக்க தேவையான காரணங்கள் இல்லை. ஒரு மாத்திரை குறைவாக கொடுத்து, கூடுதலாக 1.12 ரூபாய் பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டு மூலம், அந்த மருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்கப்பட்டது என்பதை ஏற்க முடியாது. எனவே, மெட்பிளஸ் நிறுவனம், இரு அதிகாரிகள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ என்று கூறி, புகார்தாரர் மனுவை தள்ளுபடி செய்தார்.