இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கும்... மதுபான பரிசோதனை!
பொது மக்கள் பாதுகாப்பு கருதி, இரவு நேரத்தில் போலீசார், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபடுவர். அவ்வாறு செல்லும் போலீசில், சிலர் மது அருந்தி விட்டு, வாகன ஓட்டிகளிடம் பிரச்னை செய்வது, இரு போலீசார் சண்டை போட்டு கொள்வது என சமூக வலைதளங்களில் அவ்வப்போது வீடியோக்கள் வெளியாகும். இது தொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீமுக்கு, கர்நாடக மாநில போலீஸ் ஆணைய உறுப்பினர் மோகன் குமார் தானப்பா கடிதம் எழுதி உள்ளார். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது: சட்டம் - ஒழுங்கை பராமரித்தல், குற்றங்களை கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது ஆகிய பொறுப்புகள் கொண்ட ஒரு ஒழுக்கமான படை என்ற வகையில், போலீஸ் துறை தனது பணியாளர்கள் இடையே உயர்ந்த நடத்தை நெறிமுறைகளை உறுதி செய்ய வேண்டும். தகாத வார்த்தைகள் இரவு பணியில் ஈடுபடும் காவலர்களில் சிலர், சாலை ஓரத்தில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்களில் சாப்பிட்ட உணவுக்கு பணம் செலுத்தாதது; விடுதி உரிமையாளர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது; தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது, சில சமயங்களில் பொது மக்களை தாக்கும் செயல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டுகள் எங்களுக்கு வந்துள்ளன. போலீசார் பணியில் சீருடையில் இருக்கும்போதே மதுபானம் வாங்கி, அருந்தும் சம்பவங்களும் எங்கள் கவனத்துக்கு வந்து உள்ளன. இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபடும் சில போலீசார், வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரும், எந்தவித போக்குவரத்து விதிமீறல்களும் இல்லை என்றாலும், தேவையின்றி வாகன ஓட்டிகளை மரியாதை இல்லாமல் நடத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில பணியாளர்கள் மீது கூறப்படும் முறைகேடான நடத்தை, போலீஸ் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. அதுதவிர, பொது மக்கள் சந்தேகத்துடனும், அவமரியாதையுடனும் பார்க்க காரணமாகிறது. அத்துடன் போலீஸ் மீதான நம்பிக்கையையும் சிதைக்கின்றன. டி.ஜி.பி., சுற்றறிக்கை இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அனைத்து போலீஸ் பிரிவுகள், போலீஸ் நிலையங்களும், இரவு நேர பணியை துவங்குவதற்கு முன், தங்கள் பணியாளர்கள் மதுபானம் அருந்தி உள்ளார்களா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். இதனை மாநிலத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் டி.ஜி.பி., சுற்றறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும். அவசரகால மீட்பு வாகன பணியாளர்கள் உட்பட ரோந்து வாகனங்களை தவறாமல் கண்காணிக்க வேண்டும். ரோந்து பணியில் ஈடுபடுவோரிடம் அவ்வப்போது திடீர் சோதனை, சுவாச பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தினமும் போலீஸ் நிலையத்துக்கு வரும் போலீசாருக்கு, இந்த அறிவுறுத்தல்களை தெரிவிக்க வேண்டும். மாநிலம் முழுதும் இதனை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
கர்ப்பிணி
போலீசாருக்கு விலக்கு
டி.ஜி.பி.,க்கு மோகன் குமார் தானப்பா எழுதிய மற்றொரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: சண்டிகர் போலீஸ் துறையில் உள்ள கர்ப்பிணி பெண் போலீசாருக்கு அதிக ஆபத்து உள்ள மற்றும் கடினமான பணிகளில் இருந்தும்; 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள பெண் போலீசாருக்கு, இரவு பணியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணி பெண் போலீசாருக்கு வாராந்திர பயிற்சியில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளித்து, வாராந்திர விடுமுறை நாளை பயன் படுத்தி கொள்ள வழிகாட்டுதல்களை வழங்கும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.