உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 2 சிறுமியர் மரணத்தில் திருப்பம் தற்கொலை செய்தது அம்பலம்

2 சிறுமியர் மரணத்தில் திருப்பம் தற்கொலை செய்தது அம்பலம்

பெங்களூரு: இரண்டு சிறுமியர் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தற்கொலை செய்து கொண்டது, விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து, கோலார் மாவட்ட எஸ்.பி., நிகில், நேற்று அளித்த பேட்டி: கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவின், யளசேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் தன்யா பாய், 13, சைத்ரா பாய், 13. அவர்கள் அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்தனர். 2ம் தேதி மாலை வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியர், திடீரென மாயமாகினர். எங்கும் தென்படாததால் போலீசாரிடம் குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீசார் தேடியபோது, 4ம் தேதி காலை 7:00 மணியளவில், குப்பம்பாளையா கிராமத்தின் கிணற்றில் இருவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது. உடல்களை மீட்ட போலீசார், விசாரணையை துவக்கினர். ஆரம்பத்தில் சிறுமியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. விசாரணையின்போது, தன்யா பாயின் ஜாமெட்ரி பாக்சில், அவர் எழுதி வைத்த தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அதில், 'எனக்கு வாழ விருப்பம் இல்லை. சாக வேண்டும். நான் இறந்தால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள்' என குறிப்பிட்டிருந்தார். தன்யா பாய் வீட்டில் குடும்ப பிரச்னை இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். தன்யா பாயின் தம்பி பிறவியிலயே மாற்றுத்திறனாளி. அவரை தன்யாவே பராமரித்தார். அதேபோன்று, சைத்ரா பாயும், 'அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள்' என, கடிதம் எழுதி வைத்துள்ளார். இவரது தாய் சந்திரா பாய், இரண்டு ஆண்டுக்கு முன்பு, புற்றுநோயால் இறந்தார். தந்தை பாபு ராவ் பெங்களூரில் வசிக்கிறார். தன் மகள் சைத்ரா பாயை, யளசேபள்ளியில் உறவினர் வீட்டில் விட்டிருந்தார். இவரது வீட்டில் அதிகமாக வேலை வாங்குவதாக, தன் தோழிகளிடம் சைத்ரா கூறியுள்ளார். சைத்ரா பாய், தன்யா பாய் இருவருக்குமே, குடும்ப பிரச்னை இருந்துள்ளது. இதுவே அவர்களின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ