உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்ப்பிணி மர்ம சாவு வழக்கில் கணவர் கைது மூக்கில் ஓங்கி குத்தியதால் இறந்தது அம்பலம்

கர்ப்பிணி மர்ம சாவு வழக்கில் கணவர் கைது மூக்கில் ஓங்கி குத்தியதால் இறந்தது அம்பலம்

ஹென்னுார்: கர்ப்பிணி மர்ம சாவு வழக்கில், உத்தர பிரதேசத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறில் மூக்கில் ஓங்கி குத்தியதால் கர்ப்பிணி இறந்தது தெரிய வந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவம், 25; பெயின்டர். இவரது மனைவி சுமனா, 22. மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். பெங்களூரு தனிசந்திராவில் வாடகை வீட்டில் இருவரும் வசித்தனர். நேற்று முன்தினம் காலை, தம்பதி வசித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, சுமனா உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். வீட்டில் சிவம் இல்லை. மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. சுமனாவின் மூக்கில் இருந்து ரத்த கறை இருந்தது. ஹென்னுார் போலீசார் மர்ம சாவு வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் எலஹங்கா ரயில் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த சிவத்தை, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, ஹென்னுார் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. தப்ப முயற்சி சிவமுக்கும், சுமனாவுக்கும் ஆறு மாதங்களுக்கு முன், உத்தர பிரதேசத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு சிவம் வந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் தினமும் அவர்களுக்குள், சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி இரவு ஏற்பட்ட சண்டையில், மனைவியின் மூக்கில் சிவம் ஓங்கி குத்தி உள்ளார். இதனால் மூக்கில் ரத்தம் வடிந்துள்ளது. பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், துாங்க சென்றுவிட்டார். ஆனால் மயக்கம் போட்டு விழுந்த சுமனா இறந்துவிட்டார். மறுநாள் காலை சிவம் எழுந்து பார்த்தபோது, மனைவி துாங்கிக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்து, வேலைக்கு சென்றுவிட்டார். இரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி இறந்தது தெரிந்தது. யாரிடமும் அவர் சொல்லவில்லை. வீட்டில் மது அருந்தியதுடன், 'முட்டை புர்ஜி' செய்தும் சாப்பிட்டுள்ளார். உடல் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்ததும், வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். எலஹங்காவில் இருந்து ரயில் மூலம், உத்தர பிரதேசம் தப்பிச் செல்ல முயன்றபோது, போலீசிடம் சிக்கியது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ