உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.10 கோடியில் அம்பேத்கர் ஆராய்ச்சி மையம்

ரூ.10 கோடியில் அம்பேத்கர் ஆராய்ச்சி மையம்

தங்கவயல்: ''அம்பேத்கர் நினைவாக தங்கவயலில் 9 ஏக்கரில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆராய்ச்சி மற்றும் அறிவுத் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்,'' என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அறிவித்தார். கர்நாடகாவில் அம்பேத்கர் வந்து சென்ற இடங்களில் அரசு சார்பில் அவரின் பெயரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, பா.ஜ., ஆட்சியில் அறிவித்திருந்தார். தங்கவயலிலுக்கும் அம்பேத்கர் வந்து சென்றார். இந்த தினத்தை அறிவொளி தினமாக கடைபிடிக்க வேண்டுமென, சமூக அமைப்புகள் கேட்டுக்கொண்டன. கர்நாடக அரசின் அறிவிப்பின்படி, அம்பேத்கர் நினைவு ஆராய்ச்சி மையம் அமைக்க, பெமல் நகரில் இடம் தேர்வு செய்து பெயர் பலகை வைக்கப்பட்டது. ஆனால், திடீரென பெயர் பலகையை அகற்றி, கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரிய இடம் என புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. இதனால், எந்த இடத்தில் அம்பேத்கர் ஆராய்ச்சி மற்றும் அறிவுத்திறன் மேம்பாட்டு அமைக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. நேற்று மதியம், உரிகம் பகுதியில் உள்ள டாக்டர் திம்மையா பொறியியல் கல்லுாரி அருகில், இடத்தை தேர்வு செய்த பின், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அளித்த பேட்டி: தங்கவயலில் அம்பேத்கர் ஆராய்ச்சி மையம் மற்றும் அறிவுத் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க, அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது; இது போதாது. எனவே 10 கோடி ரூபாய் செலவில், 9 ஏக்கரில் தங்கவயலின் மையப் பகுதியான உரிகம் பொறியியல் கல்லுாரி அருகில் அமைக்கப்படும். இங்கு இளைஞர்கள் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள ஆய்வு மையம் உருவாக்கப்படும். அம்பேத்கர் சிந்தனைகள், அவரின் சித்தாந்தங்கள் பலருக்கும் பயன்படும் வகையில் அமையும். இவ்வாறு அவர் கூறினார். நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, நிலைக்குழுத் தலைவர் வி.முனிசாமி, கவுன்சிலர்கள் ஜெயபால், மாணிக்கம், சிவாஜி, சுபாஷினி, பிளாக் காங்கிரஸ் தலைவர் மதலை முத்து, முன்னாள் கவுன்சிலர் புண்ணிய மூர்த்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி