கூட்ட நெரிசல் பின்னணியில் கலவரக்காரர்கள் ஓய்வு டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் பகீர்
உடுப்பி: பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானதன் பின்னணியில், கே.ஜி.ஹள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் இருப்பதாகவும் விராட் கோலியை குற்றவாளி ஆக்க அரசு முயற்சிப்பதாகவும் ஓய்வு டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.உடுப்பியில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில், அரசு சமர்ப்பித்து உள்ள அறிக்கையில் 'ஆர்.சி.பி., வெளியிட்ட விராட் கோலி பேசிய வீடியோவால் தான் ரசிகர்கள் குவிந்தனர்' என கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோவை எத்தனை பேர் பார்த்தனர்?'வீடியோவை பார்த்து இங்கு வந்தவர்கள் எத்தனை பேர்' என்பது குறித்து, முதல்வர் சித்தராமையாவிடம் தகவல் உள்ளதா? கூட்ட நெரிசலின் பின்னணியில் பெங்களூரில் செயல்படும் கடத்தல் மாபியா உள்ளது. கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை வைத்து, கூட்ட நெரிசல் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. சிறையில் தள்ள சதி
ஆனால் விராட் கோலி மீது பழி சுமத்தி, அவரை சிறையில் தள்ள, அரசு சதி செய்கிறது. இதற்காக விராட் கோலி ரசிகர்களிடம், அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த வழக்கில் விராட் கோலிக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம்.கூட்ட நெரிசலில் கலவரக்காரர்களுக்கு தொடர்பு உள்ளது பற்றி, மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தும் பெங்களூரு கலெக்டர் ஜெகதீசுக்கு 8 பக்க கடிதம் எழுதி உள்ளேன்.கூட்ட நெரிசல் வழக்கில் எந்த தவறும் செய்யாத, ஐ.பி.எஸ்., தயானந்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மூத்த அதிகாரியான அவர் எதிர்காலத்தில் டி.ஜி.பி., பதவிக்கு வரக் கூடாது என்று தடுப்பதே அரசின் நோக்கம்.டி.ஜி.பி.,யாக சலீம் நியமிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் உள்ளது. டி.ஜி.பி., பதவிக்கான போட்டியில் மூத்த அதிகாரிகள் பிரசாந்த் குமார் தாக்கூர், சலீம், ராமசந்திர ராவ், அலோக் குமார் இருந்தனர். பதவி மறுப்பு
நியாயப்படி பார்த்தால் பிரசாந்த் குமார் தாக்கூர் தான் டி.ஜி.பி., ஆகி இருக்க வேண்டும். ராமசந்திரராவின் மகள் ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் சிக்கியதை காரணமாக வைத்து, அவருக்கு டி.ஜி.பி., பதவி மறுக்கப்பட்டது.தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தை கையில் எடுத்து, அலோக் குமாருக்கும் டி.ஜி.பி., பதவி கிடைக்கவிடாமல் செய்துள்ளனர். கடந்த முறை சித்தராமையா முதல்வராக இருந்தபோது, நான் டி.எஸ்.பி.,யாக பணியாற்றினேன். போலீஸ் துறைக்குள் என்னென்ன அரசியல் நடக்கும் என்று, எனக்கு நன்கு தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.