உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கேரளாவில் பரவும் அமீபா தொற்றால் கர்நாடகாவில்... கலக்கம்!: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம்

கேரளாவில் பரவும் அமீபா தொற்றால் கர்நாடகாவில்... கலக்கம்!: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம்

பெங்களூரு: அண்டை மாநிலமான கேரளாவில், மூளையை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் அமீபா தொற்று பரவுவதால், கர்நாடக மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இது கர்நாடகாவில் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில், மாநில அரசு ஆர்வம் காட்டாததால், மருத்துவ வல்லுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில், அமீபா தொற்று வேகமாக பரவுகிறது. அம்மாநிலத்தில், 61 பேருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை, 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அமீபா, தேங்கி நிற்கும் தண்ணீர், குளங்கள், ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் தென்படும். இது, மூக்கின் வழியாக மூளைக்குள் சென்று சிறிது, சிறிதாக மூளையை தின்னும் அபாயமான தொற்றாகும். கேரளாவில் இத்தொற்று, மூன்று மாத பச்சிளம் குழந்தை முதல், 90 வயது முதியவர்களுக்கும் பரவியதாக, தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய அபாயமான தொற்று, கர்நாடகாவில் பரவாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில், அரசு ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து, அதிருப்தி தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர்கள், உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். தொற்று தேங்கும் நீரில் உற்பத்தியாகும் நீர் நிலைகளில் நீச்சலடிப்பதை தவிர்ப்பது நல்லது. மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாக, தொற்று உடலுக்குள் சென்று முக்கியமான நரம்புகளை பாதிக்கும். குறிப்பாக, மூளையை அரித்து விடும். பரிசோதனை தொற்று ஏற்பட்ட ஒன்பது நாட்களில், நோய் அறிகுறிகள் தென்படும். அதிகமான காய்ச்சல், தலைவலி, வாந்தி, இந்த நோய் தாக்கியதின் அறிகுறிகள். இத்தகைய அறிகுறி இருந்தால், தாமதிக்காமல் டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என, மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பெங்களூரின், சக்ரா வேர்ல்டு மருத்துவமனையின், நரம்பியல் பிரிவு தலைவர் டாக்டர் அர்ஜுன் ஸ்ரீவத்சவா கூறியதாவது: அமீபா தொற்று மிகவும் அபாயமானது. தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் தென்பட்டுள்ளது. தற்போதைக்கு இத்தொற்று கர்நாடகாவில் தென்படவில்லை என்றாலும், பரவாமல் தடுப்பது அவசியம். மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம், ஏரிகள், ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் உற்பத்தியாகும் இந்த தொற்று, மூக்கின் துவாரங்கள் வழியாக, உடலுக்குள் சேர்ந்து, வேகமாக மூளைக்குள் நுழைந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான தலைவலி, காய்ச்சல், கழுத்து பிடிப்பு, குழப்பமான மனநிலை, வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும், இத்தகைய அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம் சென்று, சிகிச்சை பெறுங்கள். இதன் தாக்கம் தீவிரமானால், கோமாவுக்கு செல்லும் அபாயமும் உள்ளது. அசுத்தமான, சுகாதாரமற்ற நீச்சல் குளங்களில் நீந்துவதை, மக்கள் தவிர்க்க வேண்டும். நீச்சல் குளம் சுத்தமாக உள்ளதா, சரியாக நிர்வகிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்கள், ஏரிகள், ஆறுகளில் நீந்தவே கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கேரளாவில் அமீபா தொற்று, பல ஆண்டுகளாக தென்படுகிறது என்றாலும், தற்போது இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பது கவலைக்குரிய விஷயமாகும். ஆரம்பத்தில் அசுத்தமான ஏரி, நீச்சல் குளங்களில் நீந்துவதால், அமீபா தொற்று உடலுக்குள் புகுந்துவிடும் என, கூறப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக, நீச்சல் குளத்திலோ, ஏரியிலோ இறங்காத குழந்தைக்கும், இந்த தொற்று பாதித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறை கர்நாடகாவில், இதுவரை யாருக்கும் அமீபா தொற்று தென்படவில்லை. ஆனால் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அவசியம் ஏற்பட்டால், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவோம். அமீபா தொற்று தென்பட்ட பகுதிக்கு சென்று வந்த நபர்களில், யாருக்காவது தலைவலி, காய்ச்சல், வாந்தி போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை