அனந்த்குமார் ஹெக்டேவுக்கு மர்ம நபர் கொலை மிரட்டல்
உத்தரகன்னடா: பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி., அனந்த்குமார் ஹெக்டேவுக்கு, மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்து உள்ளது. உத்தர கன்னடா முன்னாள் எம்.பி., அனந்த் குமார் ஹெக்டே, 'ஹிந்து பயர் பிராண்ட்' என, பிரசித்தி பெற்றவர். சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து, கட்சியை தர்ம சங்கடத்தில் சிக்க வைப்பார். இதனால், 2024 லோக்சபா தேர்தலில், இவருக்கு சீட் நழுவியது. இவருக்கு பல முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.கடந்த மாதம் 24ம் தேதியன்று, மொபைல் பேசிய மர்ம நபர், 'எனக்கு எதிராக போலீசில் புகார் செய்த உன்னை கொல்லாமல் விட மாட்டேன்' என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.சில நாட்களுக்கு முன்பு வந்த 'இ - மெயிலில்', 'நீ தான் பா.ஜ.,வின் அனந்த்குமார் ஹெக்டேவா, நான் முன்பு உன்னை மிரட்டியபோது, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாய். உன்னை நான் விடமாட்டேன்; உன்னை கொலை செய்கிறேன் பார்' என, கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து, அனந்த்குமார் ஹெக்டேவின் தனிச்செயலர் சுரேஷ் ஷெட்டி, சிர்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.