திடக்கழிவு மேலாண்மை ஆய்வு ஆந்திர குழு பெங்களூரு வருகை
பெங்களூரு : திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்ய, ஆந்திர நகராட்சி நிர்வாக அமைச்சர் பொங்குரு நாராயணா தலைமையிலான குழு, பெங்களூரு வந்தனர். ஆந்திர நகராட்சி நிர்வாக அமைச்சர் பொங்குரு நாராயணா, ஆந்திர பிரதேச தலைநகர் மண்டல வளர்ச்சி ஆணைய கமிஷனர் கண்ணன் பாபு, நகராட்சி நிர்வாக கமிஷனர் சம்பத் குமார் ஆகியோர் நேற்று, பெங்களூரு வந்தனர். மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்திற்கு சென்றனர். அவர்களை மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், நிதி பிரிவு சிறப்பு கமிஷனர் ஹரிஷ்குமார் வரவேற்றனர். பெங்களூரின் திடக்கழிவு மேலாண்மை குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம், ஆந்திர குழு கேட்டறிந்து கொண்டது. அவர்களிடம் துஷார் கிரிநாத் கூறியதாவது:பெங்களூரில் தற்போது தினமும் 6,500 டன் கழிவுகள் உருவாகின்றன. ஆட்டோ மூலம் வீடு, வீடாக சென்று ஈரமான, உலர்ந்த குப்பைகள், கழிவுகளை தனித்தனியாக சேகரிக்கிறோம். திடக்கழிவு விதிகள் மற்றும் மாநகராட்சி துணை சட்டத்தின்படி, முதல்முறையாக சொத்து வரியுடன் குப்பை கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.கழிவுகளை தனித்தனியாக சேகரித்து பதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் சேகரிக்கப்படும் கட்டுமான கழிவுகளை பதப்படுத்த 2 அலகுகள் உள்ளன. மேலும் நான்கு அலகுகள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் உள்ள வார்டுகளில் குப்பைகளை சுத்தம் செய்ய ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.முக்கிய சாலைகள், மேம்பாலங்களை சுத்தம் செய்ய இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. கழிவுகள் அகற்றும் பிரச்னையை தீர்க்க, இரண்டு இரண்டாம் நிலை திடக்கழிவு ஆலைகள், தானியங்கி கழிவுகளை வரிசைப்படுத்த தனி ஆலையும் நிறுவப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.