உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சனிக்கிழமை மட்டுமே திறந்திருக்கும் ஆஞ்சநேயர் கோவில்

சனிக்கிழமை மட்டுமே திறந்திருக்கும் ஆஞ்சநேயர் கோவில்

– நமது நிருபர் – பெங்களூரு அஜ்ஜனஹள்ளி அடுத்த சுலிவாரா கிராமத்தில் ஸ்ரீ கனிவே முத்துராய சுவாமி கோவில் உள்ளது. ஆஞ்சநேயருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில். இந்த கோவில் இருப்பது அதிகம் பேருக்கு தெரியாது. இக்கோவிலின் பெயருக்கு பின்னணியில் பெரிய கதையே உள்ளது. ராமாயணத்தில் காவிரி நதியில் சீதா தேவி நீராடிக் கொண்டிருக்கும் போது, தனது விலைமதிப்பற்ற முத்து மூக்குத்தியை தவறவிடுகிறார். இதை ஆஞ்சநேயர் மீட்டெடுத்து சீதா தேவியிடம் ஒப்படைக்கிறார். இந்த சம்பவம், தற்போது கோவில் உள்ள இடத்தில் நடந்த தாக கூறப்படுகிறது. இதை, நினைவு கூரும் வகையில், கோவிலுக்கு கனிவே முத்துராய சுவாமி கோவில் என பெயர் வைக்கப்பட்டது.

ஆச்சரியம்

இக்கோவின் மூலவரான ஆஞ்சநேயரை முத்துராய சுவாமி எனவும் பக்தர்கள் அழைக்கின்றனர். முத்துராய சுவாமி என்றால் முத்துக்களின் அரசன் என்று பொருள். கனிவே என்றால் பள்ளத்தாக்கு என்று கன்னடத்தில் பொருள். கோவிலின் பெயருக்கு பின்னணியில் உள்ள கதை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது போல, இக்கோவில் சனிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும் என்பது மற்றொரு ஆச்சரியம். ஆஞ்சநேயருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே கோவில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் நடை சாத்தியிருக்கும். வாரம் முழுக்க சுவாமி தியானத்தில் இருப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

நீரோடைகள்

ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு மேல் சிறப்பு பூஜை நடக்கும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், இங்கு வந்து முத்துராய சுவாமியை வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சனிக்கிழமை மதியம் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். இதையெல்லாம் விட மற்றொரு சிறப்பு என்னவென்றால் கோவிலின் அமைவிடம் தான். கோவிலை சுற்றி மரங்கள், நீரோடைகள் உள்ளன. கோவிலை சுற்றி வணிக கடைகள் எதுவும் கிடையாது. வாகனங்களின் ஒலி கேட்காமல், பறவைகளின் சத்தம் மட்டுமே கேட்கும். இது பக்தர்களுக்கு மன அமைதியை தரும். இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !