போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு
பெங்களூரு: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கர்நாடகா முழுதும் இன்று துவங்க இருந்த, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச், 2ம் தேதிக்குள், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு கெடு விதித்து உள்ளனர். கர்நாடக அரசின் நான்கு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு நிலுவை வைத்துள்ள, 38 மாத சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும்; புதிய ஊதிய திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால், கடந்த மாதம், 19ம் தேதி, பெங்களூரில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால், போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்த் சுப்பாராவ் மறைவால், போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பிப்ரவரி, 19ம் தேதி பெங்களூரில் போராட்டம் நடக்கும் என்று அறிவித்தனர். அதன்படி, நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 26 மாத சம்பளம் நான்கு போக்குவரத்து கழக பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், பணிமனை ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு இருந்ததால், மக்களுக்கு பிரச்னை ஏற்படும் என்று கருதி, நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி, முதல்வர் சித்தராமையாவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின், 38 மாத சம்பள பாக்கியில், 26 மாத சம்பள பாக்கி வழங்கப்படும் என்றும், மார்ச் 1ம் தேதி முதல் சம்பளம் உயர்த்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. இதனால், பெங்களூரில் போராட்டம் நடக்காது என, தகவல் வெளியானது. ஆனாலும், அரசு அறிவிப்பை ஏற்க, போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் மறுத்து விட்டனர். ஏற்கனவே அறிவித்தபடி, சுதந்திர பூங்காவில் நேற்று காலை போராட்டம் து வங்கியது. ஊழியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவராஜ் அர்ஸ் உள்ளிட்ட பிரமுகர்கள், ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றனர்; அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், 38 மாத சம்பள பாக்கியை கட்டாயம் வழங்க வேண்டும். இதுகுறித்து மாலை 4:00 மணிக்குள் அரசு முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பஸ்கள் இயங்காது என்று எச்சரிக்கை விடுத்தனர். லாரி ஓட்ட செல்வோம் இந்நிலையில், கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் அக்ரம் பாஷா நேற்று மாலை சுதந்திர பூங்காவுக்கு சென்று, போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்திருடன் பேச்சு நடத்தினார். 'அரசு உங்களின் கோரிக்கையை நிறைவேற்றும். சம்பள திருத்தம் தொடர்பாக நான்கு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுடன், போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி விரைவில் ஆலோசனை நடத்துவார். இதனால், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, இன்று முதல் துவங்க இருந்த வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவராஜ் அர்ஸ் அறிவித்தார். அதே நேரம் மார்ச், 2 ம் தேதி வரை அரசுக்கு கெடுவும் விதித்தார். ஆனாலும், இந்த முடிவுக்கு போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை முக்கிஸ்தர்கள் சமாதானப்படுத்தினர். மார்ச் 2 க்குள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், கூட்டாக பணியை ராஜினாமா செய் து விட்டு லாரி ஓட்ட செல்வோம் என்று, டிரைவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
முந்தைய அரசே காரணம்
போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறுகையில், ''போக்குவரத்து கழக ஊழியர்கள், 38 மாத சம்பள பாக்கியை கேட்பதில் தவறு இல்லை. நான்கு ஆண்டுக்கு ஒரு முறை சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். 2016ல் நான் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, சம்பளம் உயர்த்தப்பட்டது. 2020ல் பா.ஜ., ஆட்சியில் சம்பளம் உயர்த்தப்படவில்லை. தற்போது ஏற்பட்ட பிரச்னைக்கு முந்தைய பா.ஜ., அரசு தான் காரணம்,'' என்றார்.