உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மிருகக்காட்சி சாலையில் மேலும் ஒரு மான் இறப்பு

 மிருகக்காட்சி சாலையில் மேலும் ஒரு மான் இறப்பு

பெலகாவி: கித்துார் ராணி சென்னம்மா மிருகக்காட்சி சாலையில், நேற்று மீண்டும் ஒரு மான் இறந்தது. இத்துடன் இறந்த மான்களின் எண்ணிக்கை, 29 ஆக அதிகரித்துள்ளது. பெலகாவி நகரில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா மிருகக்காட்சி சாலையில், அடுத்தடுத்து 28 மான்கள் உயிரிழந்தன. இதனால், வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலையில் மற்றொரு மான் இறந்தது. முதற்கட்ட பரிசோதனையில், மான்கள் 'பாக்டீரியா ஹிமோரேஜிக் சேப்டிசிமீயா' என்ற கொடிய நோயால் இறந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து, மருத்துவ வல்லுநர் சந்திரசேகர் கூறியதாவது: மான்கள், பாக்டீரியா ஹிமோரேஜிக் சேப்டிசிமீயா என்ற நோயால் இறந்திருக்கலாம் என, தெரிகிறது. இறந்த மான்களின் சிறுநீரகம், இதயம், கல்லீரல், ரத்த மாதிரிகளை தடவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். இன்னும் இரண்டு நாட்களில் அறிக்கை கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். அறிக்கை வந்த பின், வனத்துறை அமைச்சர் ஈஸவர் கன்ட்ரேவிடம் தாக்கல் செய்வோம். அறிக்கை வந்த பின் மான்களின் இறப்புக்கு என்ன காரணம் என்பது, தெளிவாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார். மிருகக்காட்சி சாலை செயலர் சுனில் கூறியதாவது: மான்களின் இறப்பு விஷயத்தில், ஊழியர்களின் அலட்சியம் தென்படவில்லை. முதலில் எட்டு மான்கள் இறந்த போதே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளனர். ஒருவேளை அவர்கள் தவறு செய்திருப்பது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி