பி.எம்.டி.சி., எலக்ட்ரிக் பஸ்களில் நிரந்தர ஓட்டுநர்கள் நியமனம்?
பெங்களூரு: பி.எம்.டி.சி., எலக்ட்ரிக் பஸ்களில் நிரந்தர ஓட்டுநர்களை நியமிப்பது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆலோசனையில் இறங்கி உள்ளார். பெங்களூரில், 2021ல் பி.எம்.டி.சி., பஸ்களில் எலக்ட்ரிக் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பஸ்களுக்கு ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, காலப்போக்கில் காணாமல் போனது. பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநர்களின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு நிகழ்வதே இதற்கு காரணமாக அமைந்தன. இவ்வகை பஸ்களில் ஓட்டுநர்கள், தனியார் நிறுவனங்கள் மூலம் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு முன் அனுபவம் அவ்வளவாக கிடையாது; பணியின்போது அலட்சியமாக செயல்படுவது உள்ளிட்ட காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதுமட்டுமின்றி, பஸ்களை தாறுமாறாக ஓட்டுகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளில் பலர் உயிரிழக்கும் துயர சம்பவங்கள் நேர்ந்தன. இதனால், சாலையில் செல்லும் மக்கள் பி.எம்.டி.சி., எலக்ட்ரிக் பஸ்களை பார்த்து அச்சம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, எலக்ட்ரிக் பஸ்களுக்கு நிரந்தர ஓட்டுநர்களை நியமிப்பது குறித்த சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிரந்தர ஓட்டுநர்களை நியமிப் பதன் மூலம் சாலைகளில் ஏற்படும் விபத்துகள் குறையும் என்ற கருத்து வெளியானது. இது மட்டுமின்றி, பணியின்போது மது போதையில் இருக்கும் ஓட்டுநர்கள், அலட்சியமாக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களை கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், விரைவில் பி.எம்.டி.சி.,யின் எலக்ட்ரிக் பஸ்களில் நிரந்தர ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கலாம்.