பெங்களூரு: பா.ஜ., உட்பட பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்புக்கு இடையே, அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு, கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. மாநில பட்ஜெட் கடந்த 7ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு, எதிர்க்கட்சியான பா.ஜ., உட்பட பல்வேறு கட்சிகள், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.பட்ஜெட் மீது சட்டசபையில் பேசிய முதல்வர் சித்தராமையா, அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு, 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் கூறினார். மதத்தின் ரீதியில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. வெளிப்படை
இந்நிலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முஸ்லிம்களுக்கு, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், கே.டி.பி.பி., எனப்படும் கர்நாடகா பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதைத் தவிர, நகர் பகுதிகளில் வழங்கப்படுவது போல், கிராமங்களிலும் அங்கீகரிக்கப்படாத இடங்களில் வசிப்போருக்கு, 'பி கத்தா' எனப்படும் பட்டா வழங்கும் வகையில், கர்நாடகா கிராம சுயராஜ் மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திருத்த மசோதாவுக்கும், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கர்நாடகா பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ், பல்வேறு அரசு துறைகள், வாரியங்கள், அமைப்புகளுக்கு, பொருட்கள் மற்றும் சேவையை கொள்முதல் செய்வதற்கான 'டெண்டர்' விடப்படுகிறது. இதில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு, பிரிவு 1, பிரிவு 2ஏ, பிரிவு 2பி என, அனைத்து பிரிவுகளிலும், 1 கோடி ரூபாய் வரையிலான பணிகளில், முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, புதிய சட்டத்திருத்தம் கூறுகிறது. இதில், பிரிவு 2பி என்பது முஸ்லிம்களுக்கானது.இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., - எம்.பி.,யுமான ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளதாவது:மாநில அரசின் இந்த முடிவு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. அதனால், இதை கடுமையாக எதிர்ப்போம். சட்டவிரோதம்
அரசு டெண்டர்களிலும், இட ஒதுக்கீடு வழங்கப்படுவது என்பது சட்டத்துக்கு புறம்பானது. சமூகத்தில் பின்தங்கியுள்ளோருக்கே இட ஒதுக்கீடு வழங்க முடியும். மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது.தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்தும், காங்கிரஸ் இன்னும் பாடம் படிக்கவில்லை என்றே தெரிகிறது. இந்த இட ஒதுக்கீடு என்பது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் ஆதரவுடனேயே செய்யப்படுகிறது. இது போன்ற முடிவுகளை எடுக்கும் தைரியம், அரசியல் செல்வாக்கு சித்தராமையாவுக்கு இல்லை. ஓட்டு வங்கிக்காக தாஜா செய்யும் ராகுலின் கொள்கையையே இது பிரதிபலிக்கிறது.இது கர்நாடகாவுக்கான பிரச்னை அல்ல. நாடு முழுதும் தாக்கத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் மற்றும் ராகுலின் மனநிலையைக் காட்டுவதாகவே இந்த இட ஒதுக்கீடு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.''காங்கிரஸ் தாஜா அரசியல் தொடர்கிறது. அனைவருக்கும் மனநிறைவு என்பதே பா.ஜ.,வின் கொள்கையாக உள்ளது,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் கூறியுள்ளார்.
முஸ்லிம் லீக்'
இந்த பிரச்னை குறித்து, பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறியுள்ளதாவது:ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாக இட ஒதுக்கீடு வழங்க, அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை. கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு, இரண்டு விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஒன்று ஊழல் செய்வது, இரண்டாவது தாஜா அரசியல் செய்வது.காங்கிரஸ், புதிய முஸ்லிம் லீக் கட்சியாக மாறி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனேவல்லா கூறியுள்ளதாவது:இது காங்கிரஸ் கட்சியின், முஸ்லிம் லீக், ஜின்னாவின் மனநிலையையே காட்டுவதாக உள்ளது. அரசு டெண்டர்களையும், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி அளிப்பதை ஏற்க முடியாது. முஸ்லிம்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து சமீபத்தில் ஜின்னா பட்ஜெட்டை தாக்கல் செய்த கர்நாடக அரசு, தற்போது அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. இது ஆபத்தானது.இவ்வாறு அவர் கூறினார்.