உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ நிகழ்ச்சிக்கு அழைக்காத விவகாரம் அசோக் - பிரியங்க் கார்கே வார்த்தை மோதல்

மெட்ரோ நிகழ்ச்சிக்கு அழைக்காத விவகாரம் அசோக் - பிரியங்க் கார்கே வார்த்தை மோதல்

பெங்களூரு: மெட்ரோ நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்காத விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் அசோக், அமைச்சர் பிரியங்க் கார்கே இடையில் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. பெங்களூரில் மெட்ரோ மூன்றாவது கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் பெயர் பட்டியலில், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் பெயர் முதலில் இடம்பெறவில்லை. அந்த பட்டியலை, கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே தனது, 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அவரது பதிவு: எதிர்க்கட்சி தலைவர் அசோக் தனது சொந்த கட்சியினரால் எதிர்க்கப்படும் தலைவரா. பெங்களூரு மெட்ரோ மூன்றாவது கட்ட பணிகளுக்கான துவக்க விழாவுக்கு அசோக்கிற்கு மேடையில் இடம் கொடுக்க, பா.ஜ., மறுத்து உள்ளது. மத்திய அரசு நெறிமுறையை மறந்து விட்டதா, வேண்டுமென்றே அசோக் புறக்கணிக்கப்பட்டாரா. புறக்கணிப்பா? பெங்களூரை சேர்ந்த எம்.எல்.ஏ., அல்லாத விஜயேந்திராவுக்கு, பிரதமருடன் மேடையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், அசோக் புறக்கணிக்கப்பட்டு உள்ளார். இதனை உங்கள் நாற்காலி பறிப்பின் முன்னோட்டமாக நாங்கள் பார்க்கலாமா. இனிமேலாவது மற்றவர்கள் வீடுகளை பார்ப்பதை விட்டுவிட்டு, உங்கள் சொந்த வீட்டை பாருங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டு இருந்தார். இதற்கிடையில் முதலில் வெளியான பட்டியலை திருத்தி, புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அசோக் பெயர் இடம் பெற்று இருந்தது. அந்த பட்டியலையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, பிரியங்க் கார்கே பதிவு: மதிப்பிற்குரிய அசோக் அண்ணா. உங்கள் கட்சி உங்களுக்கு செய்த புறக்கணிப்பை நான் வெளிப்படுத்தியதால், மெட்ரோ துவக்க நிகழ்ச்சியில் உங்களுக்கு ஒரு இடமும், கொஞ்சம் மரியாதையும் கிடைத்து உள்ளது. இதற்காக நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் இரவு, பகலாக உழைத்தாலும் உங்களை விட இளையவரான விஜயேந்திராவின் கீழ் தான் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்று மறந்து விடாதீர்கள். இந்த பெயர் சேர்ப்பு உங்களுக்கு கிடைத்த மரியாதை இல்லை. அது வெறும் பிச்சை. மெட்ரோ ரயில் துவக்க நிகழ்ச்சியில் உங்களுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்து உள்ளது. வந்தே பாரத் ரயில் துவங்க நிகழ்ச்சியில் உங்களுக்கு நாற்காலி இல்லை. விஜயேந்திராவுக்கு மட்டும் நாற்காலி உள்ளது. அசோக் அண்ணா நீங்கள் பாவம். இவ்வாறு பதிவிட்டு இருந்தார். பிரியங்க் கார்கேவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அசோக்கின் எக்ஸ் பதிவு: அமைச்சர் பிரியங்க் கார்கே, உங்கள் தந்தை மல்லிகார்ஜுன கார்கே 83 வயதில், எதற்கும் உதவாத 55 வயது ராகுலுக்கு வணக்கம் செலுத்தி, பின்னால் நடந்து செல்லும் சூழ்நிலையில் இருந்திருக்க கூடாது. போலி காந்தி குடும்பத்திற்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், உங்கள் தந்தைக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. உங்கள் தந்தை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்று கூறி மார்தட்டி கொள்ளாதீர்கள். போலி காந்தி குடும்பத்திற்கு தலைவராக இருக்க மாட்டேன் என்று ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறியதால், தவிர்க்க முடியாமல் உங்கள் தந்தைக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்து உள்ளது. ஒரு விஷயத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அமைச்சர் பதவி நீங்கள் என்ன செய்தாலும், நீங்களும், உங்கள் குடும்பமும் போலி காந்தி குடும்பத்தின் கீழ் தான் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் நீங்களும் போலி காந்தி குடும்ப குழந்தைகளுக்கு வணக்கம் செலுத்தி, உங்கள் அரசியல் வாழ்க்கையை வாழ வேண்டி இருக்கும். உங்களுக்கு கிடைத்துள்ள அமைச்சர் பதவி உங்கள் திறமைக்கு கிடைத்தது இல்லை. உங்கள் தந்தையை திருப்திபடுத்த உங்களுக்கு கிடைத்த ஆறுதல் பரிசு. இவ்வாறு அசோக் பதிலடி கொடுத்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !