உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சாமனுார் சிவசங்கரப்பா உடல் அடக்கம் நாள் முழுதும் சட்டசபை ஒத்திவைப்பு 

 சாமனுார் சிவசங்கரப்பா உடல் அடக்கம் நாள் முழுதும் சட்டசபை ஒத்திவைப்பு 

தாவணகெரே: உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா உடல் அரசு மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சட்டசபை, மேல்சபை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது. தாவணகெரே தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா, 94. இந்தியாவின் அதிக வயது கொண்ட எம்.எல்.ஏ., என்ற பெருமையை பெற்ற இவர், உடல்நலக்குறைவால் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான தாவணகெரேவுக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், மடாதிபதிகள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இறுதி மரியாதை செய்தனர். பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, அவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா உள்ளிட்டோரும், சி வசங்கரப்பா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின், அவருக்கு சொந்தமான கல்லேஸ்வரா ஆலை வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன், லிங்காயத் சமூக முறைப்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதும், சட்டசபையில் சாமனுார் சிவசங்கரப்பா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து, முதல்வர் சித்தராமையா பேசினார். இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் அசோக், அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசினர். ஒரு நிமிட மவுன அஞ்சலிக்கு பின், நாள் முழுதும் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இதுபோல மேல்சபையிலும் இரங்கல் தெரிவித்து ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ