உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 3 நாள் விடுமுறைக்கு பின் சட்டசபை இன்று கூடுகிறது

3 நாள் விடுமுறைக்கு பின் சட்டசபை இன்று கூடுகிறது

பெங்களூரு : மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக விளக்கம் அளிப்பதாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி இருப்பதால், பரபரப்பு நிலவுகிறது. கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர், பெங்களூரு விதான் சவுதாவில் கடந்த 11ம் தேதி துவங்கியது. மாநிலத்தில் நிலவும் உரத்தட்டுப்பாடு, தர்மஸ்தலா வழக்கு உட்பட பல பிரச்னைகளை முன்வைத்து, அரசுக்கு எதிராக பா.ஜ., உறுப்பினர்கள் சட்டசபையில் போராட்டம் நடத்தினர். கேள்விகளால் ஆட்சியாளர்களை துளைத்து எடுத்தனர். கடந்த 14ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தின் போது, தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக எஸ்.ஐ.டி.,யிடம் இருந்து, இடைக்கால விசாரணை அறிக்கையை அரசு பெற வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் உட்பட பா.ஜ., உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். கடந்த 15ம் தேதி சுதந்திர தினம், நேற்று முன்தினம், நேற்று வார விடுமுறை என, சட்டசபைக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. மூன்று நாட்களுக்கு பின், இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. தர்மஸ்தா வழக்கு தொடர்பாக விளக்கம் அளிப்பதாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார். அவர் விளக்கம் அளிக்கும் போது அரசுக்கு ஆதரவாக ஏதாவது பேசினால், பதிலடி கொடுக்க பா.ஜ., தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இதனால் இன்றைய சட்டசபையில் அனல் பறக்க போவது உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை