உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஏரியை ஆக்கிரமித்து தொழிற்சாலை ஆடு மேய்ப்பவர் மீது தாக்குதல்

ஏரியை ஆக்கிரமித்து தொழிற்சாலை ஆடு மேய்ப்பவர் மீது தாக்குதல்

கொப்பால்: தண்ணீர் குடிக்க ஆடுகளை ஏரிக்கு ஓட்டிச் சென்றவரை, தொழிற்சாலை ஊழியர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். கொப்பால் நகரின் பசாபுரா கிராமத்தில், பல்டோடா நிறுவனம், உருக்கு தொழிற்சாலை கட்ட, அரசு நிலம் பெற்றுள்ளது. இந்த இடத்தை ஒட்டி, சர்வே எண் 143ல், ஏரி அமைந்துள்ளது. 44.3 ஏக்கர் ஏரி, கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் குடிநீருக்கு பயன்படுத்தி வருகின்றனர். பொது ஏரியை பல்டோடா தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்தனர். ஏரியில் பொது மக்கள் பயன்படுத்த விடாமல், தடுப்பு சுவர் கட்டியுள்ளனர். இதை கண்டித்து, சுற்றுச்சூழல் நலன் பாதுகாப்பு அமைப்பு, கொப்பால் நலன் பாதுகாப்பு அமைப்பினர் இரண்டு நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். இந்த ஏரியை பொது மக்கள் பயன்படுத்தவும், கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் அனுமதிக்க கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். அப்போது ஆடு மேய்ப்போரும் தொழிற்சாலை வளாகத்தில் நுழைந்து, போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் தொடர்பாக, ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. நேற்று காலையில், பசாபுரா கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்ப்பாளர் தேவப்பா ஹாளஹள்ளி என்பவர், அந்த ஏரிக்கு வந்து ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டினார். அப்போது தொழிற்சாலை பாதுகாப்பு ஊழியர்கள், அவரை கண் மூடித்தனமாக தாக்கினர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையறிந்த வெவ்வேறு அமைப்பினர், தொழிற்சாலைக்கு சென்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர்களுக்கும், தொழிற்சாலை பாதுகாப்பு ஊழியர்களுக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. அங்கு வந்த கொப்பால் நகர போலீசார், சூழ்நிலையை சரி செய்தனர். ஆடு மேய்ப்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை