தன் திருமணத்தை நிறுத்திய சிறுமி மேல் படிப்புக்கு அதிகாரிகள் உறுதி
விஜயநகரா : அடுத்த மாதம் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்த கோரி, குழந்தைகள் நல பாதுகாப்பு உதவி எண்ணுக்கு போன் செய்து நிறுத்திய சிறுமியை, கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர். உதவி எண் விஜயநகரா மாவட்டம், ஹகரிபொம்மனா கிராமத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி, நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 94 சதவீத மதிப்பெண் பெற்றார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், மகளை படிக்க வைக்க முடியாத பெற்றோர், திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அடுத்த மாதம் திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டது. இத்திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி, படிக்க வேண்டும் என்று விரும்பினார். தனது தோழிகள் மூலம் உதவி பெற முடிவு செய்தார். தோழிகள் கொடுத்த தைரியத்தால், குழந்தைகள் நல பாதுகாப்பு அவசர எண்ணுக்கு போன் செய்தார். தகவல் அறிந்த தாசில்தார், குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் நல அதிகாரிகள், போலீசார், கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி, வருவாய் இன்ஸ்பெக்டர் மற்றும் தாலுகா நிர்வாகத்தினர் உடனடியாக ஹகரபொம்மன கிராமத்திற்கு விரைந்தனர். அரசு அதிகாரிகள் வாகனங்கள் தங்கள் கிராமத்திற்கு படையெடுத்து வருவதை பார்த்த கிராமத்தினர் ஆச்சரியமடைந்தனர். போன் செய்த சிறுமியின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றனர். சிறுமியின் பெற்றோரிடம், அதிகாரிகள், 'உங்கள் மகள், எஸ்.எஸ்.எல்.சி.,யில் 94 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். அவரின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம். அவரை படிக்க வையுங்கள். ஆணும், பெண்ணும் சமம். குழந்தைகளுக்கு கல்வி முக்கியம்' என்று எடுத்துரைத்தனர். நிர்வாகம் பொறுப்பு அதற்கு சிறுமியின் பெற்றோர், 'எங்களுக்கும் மகளை படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால், எங்களின் ஏழ்மை காரணமாக, திருமணம் செய்து வைக்கிறோம்' என்றனர். அதற்கு அதிகாரிகள், 'உங்கள் மகளின் கல்விக்கான பொறுப்பை தாலுகா நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும். 'அவரை உடனடியாக பி.யு., கல்லுாரியில் சேர்த்து, விடுதியில் இருந்து தங்கி படிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினர். இது குறித்து சிறுமி கூறுகையில், 'குடும்பத்தின் ஏழ்மை சூழ்நிலையால், திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தினர். தாசில்தார் பெண் அதிகாரி கூறிய அறிவுரையை, என் பெற்றோர் ஏற்று கொண்டு, படிக்க வைக்கிறோம் என்று கூறினர். அதிகாரிகள், என்னை பி.யு. கல்லுாரியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார். சிறுமியின் செயலை அதிகாரிகளும், கிராமத்தினரும் பாராட்டி வருகின்றனர்.