உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திடீர் மாரடைப்பால் உயிரிழந்தால் பிரேத பரிசோதனை... கட்டாயம்!: புதிய வழிகாட்டுதல்களை அறிவித்தது சுகாதார துறை

திடீர் மாரடைப்பால் உயிரிழந்தால் பிரேத பரிசோதனை... கட்டாயம்!: புதிய வழிகாட்டுதல்களை அறிவித்தது சுகாதார துறை

ஹாசன் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் 26 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 20 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். திடீரென இம்மாவட்டத்தில் மட்டும் மாரடைப்பு மரணங்கள் அதிகமாவது மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது தொடர்பாக ஆய்வு நடத்த, ஜெயதேவா இதய மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த குழுவும் தீவிரமாக விசாரணை நடத்தி, அறிக்கை தயாரித்தது.

அறிக்கை

இந்நிலையில், பெங்களூரில் சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம், டாக்டர் ரவீந்திரநாத் நேற்று அறிக்கையை வழங்கினார்.பின், தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:ஹாசனில் தொடர் மாரடைப்பு சம்பவத்தை ஒட்டி, ஜெயதேவா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. இக்கமிட்டியினர் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.அதில், 'கொரோனாவுக்கு பின் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன' என்று குறிப்பிட்டுள்ளனர். கொரோனாவுக்கு பின், நீரிழிவு, ரத்த அழுத்த பாதிப்பும் அதிகரித்துள்ளது. இதுவும், மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.அதே நேரம், கொரோனாவின் போது செலுத்தப்பட்ட தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு, மற்ற மருந்து மாத்திரைகள் உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்யாதது, டிவி, கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதும், மக்களின் வாழ்க்கை முறை மாற்றமும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சர்வதேச அறிக்கைகளும் இதையே கூறுகின்றன.மாரடைப்பால் ஏற்படும் திடீர் மரணங்களுக்கு பிரேத பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம், இறப்புக்கான சரியான காரணத்தை கண்டறிந்து, மேலும் நடவடிக்கை எடுக்க உதவும்.

கட்டாயம்

பள்ளிகளில் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இதய பரிசோதனை கட்டாயமாக்கப்படும். இது குழந்தை பருவத்தில் இதய பிரச்னைகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க உதவும்.மாரடைப்பு, தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படும் என்று கல்வி அமைச்சர் உறுதி அளித்து உள்ளார்.கர்நாடகாவில் தற்போது 86 மருத்துவமனைகளில், 'புனித் ராஜ்குமார் விஜயஜோதி திட்டம்' செயல்பட்டு வருகிறது. இது மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் நிறுவப்படும், 'ஏ.இ.டி., எனும் தானியங்கி வெளிப்புற டிபிரிலேட்டர்கள்' முறை, 'அதாவது, ஒரு நபருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஒரு சிறிய மின்னணு சாதனம்' கையாள, மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த சாதனங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ பரிசோதனை

அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும், ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை கட்டாயம் ஆக்கப்படும். ஹாசன் மாவட்டத்தில் மாரடைப்புக்கான காரணம் குறித்த அறிக்கை, ஜூலை 10ல் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் குறித்து முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தப்படும். பின், இறுதி அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !