செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் வாங்கினால் உஷார்!
பெங்களூரு: 'பெங்களூரில் வாகனங்கள் திருட்டு மற்றும் திருட்டு வாகனங்கள் விற்பது அதிகரிக்கிறது. பொது மக்கள் 'செகண்ட் ஹேண்ட்' வாகனங்கள் வாங்கும்போது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். திருட்டு வாகனங்களை வாங்கினால், பிரச்னையை சந்திக்க நேரிடும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து, பெங்களூரு நகர உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரில் கார், பைக், ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை அதிகம். நகரில் வாகன பார்க்கிங் என்பது, பெரும் பிரச்னையாக உள்ளது. வாகன உரிமையாளர்கள் கிடைத்த இடங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதற்காகவே காத்திருக்கும் வாகன திருடர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில், வாகனங்களை திருடுகின்றனர். போலீஸ் துறை போலீஸ் துறையின் புள்ளி விபரங்களின்படி, பெங்களூரில் 2023ம் ஆண்டில், 6,185 வாகனங்கள், 2024ம் ஆண்டு 5,574 வாகனங்கள் திருடப்பட்டன. இவற்றில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். நகரில் தினமும் சராசரியாக 14 இரு சக்கர வாகனங்கள் திருடப்படுகின்றன. பெரும்பாலும் வீடுகள், அலுவலகம், மால், ரயில் நிலையம், மார்க்கெட்டுகள் முன் நிறுத்தப்படும் வாகனங்களை, திருடர்கள் குறி வைக்கின்றனர். கள்ளச்சாவி பயன்படுத்தியோ அல்லது ஹேண்ட் லாக்கை உடைத்தும் வாகனங்களை திருடுவது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுபோன்று திருடிய இருசக்கர வாகனங்களை, பாழடைந்த வீடுகள், தங்கள் வீட்டின் அருகில் உள்ள காலியிடங்கள் அல்லது புறநகர் பகுதியில் உள்ள தோப்புகளில் நிறுத்தி வைக்கின்றனர். ஒவ்வொன்றாக, தங்களின் உறவினர், கூட்டாளிகள் மூலமாக விற்கின்றனர். பெங்களூரில் திருடிய வாகனங்களை, மற்ற மாவட்டங்களின் கிராமங்களுக்கும், அண்டை மாநிலங்களின் கிராமங்களுக்கும் கொண்டு சென்று விற்கின்றனர். கிராமப்புறங்களில் திருடும் வாகனங்களை, பெங்களூரில் அதிகமாக விற்கின்றனர். குறைந்த விலை செகண்ட் ஹேண்டில் இருசக்கர வாகனம் வாங்குவோர், மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். கஷ்டத்தில் இருப்பதாக கதை கட்டி, நம்ப வைத்து வாகனங்களை விற்கின்றனர். குறைந்த விலைக்கு கிடைக்கிறதே என, மகிழ்ச்சி அடையாதீர்கள். வாகன திருடன் போலீசாரிடம் சிக்கினால், தன்னிடம் வாகனத்தை வாங்கியவரை நோக்கி விரல் நீட்டுவார். அதன்பின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்வர். அது மட்டுமின்றி, வழக்கையும் எதிர்கொள்ள நேரிடும். சமீப நாட்களாக வாகனங்களை திருடியவர்கள் மட்டுமின்றி, திருட்டு வாகனங்களை வாங்கியவர்களையும் போலீசார் கைது செய்தனர். எனவே விழிப்போடு இருக்க வேண்டும். எங்கு வாகனத்தை நிறுத்தினாலும், பூட்டுவதற்கு மறக்கக் கூடாது. சிலர் பூட்டுவது இல்லை. சிலர் பைக், ஸ்கூட்டரிலேயே சாவியை விட்டுச் செல்கின்றனர். தற்போது நகரின் பல்வேறு இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய இடங்களில் வாகனங்களை நிறுத்துங்கள். பேயிங் பார்க்கிங் வசதியை பயன்படுத்துங்கள். வீட்டின் காம்பவுண்ட் உள்ளே நிறுத்தி, கேட்களுக்கு பூட்டு போடுங்கள். வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., வீல் லாக்கிங் சிஸ்டம், கெட்டியான ஹேண்ட்லாக்குகள் பொருத்துங்கள். கள்ளச்சாவி பயன்படுத்தினால், சைரன் ஒலித்து எச்சரிக்கும் சாதனத்தை பொருத்துங்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்.