பெங்களூரு - அயோத்தி நேரடி விமான போக்குவரத்து
பெங்களூரு : தீபாவளியை முன்னிட்டு, பெங்களூரில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான போக்குவரத்தை துவக்க, 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தேபோஜோ மஹர்ஷி கூறியதாவது: தீபாவளி பண்டிகை என்பதால், பலரும் அயோத்திக்கு செல்ல விரும்பலாம். இவர்களின் வசதிக்காக, பெங்களூரில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் துவக்குகிறது. இன்று விமான சேவை துவக்கப்படும். பெங்களூரு மட்டுமின்றி, டில்லி, ஆமதாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்தும், அயோத்திக்கு நேரடி விமான போக்குவரத்து துவக்கப்படும். வரும் நாட்களிலும், பண்டிகைகள், குளிர்காலத்தில் விமான சேவை அதிகரிக்கப்படும். மும்பையில் இருந்து விமான போக்குவரத்தை துவக்க ஆலோசிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.