உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தண்ணீர் கசிவை தடுக்க ஏ.ஐ., தொழில்நுட்பம்; நாட்டிற்கு முன்னோடியாக திகழும் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம்

தண்ணீர் கசிவை தடுக்க ஏ.ஐ., தொழில்நுட்பம்; நாட்டிற்கு முன்னோடியாக திகழும் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம்

பெங்களூரில், கோடைக் காலங்களில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க, டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவது, ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் பைப்பில் ஏற்படும் நீர் கசிவை கண்டறிவது, கழிவுநீரை மறுசுழற்சி செய்வது போன்ற பல்வேறு பணிகளில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் ஈடுபட்டு வருகிறது.இந்த நடவடிக்கைகள் குறித்து, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவரும், தமிழருமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:கடந்த ஆண்டு குடிநீர் பிரச்னையை எப்படி சமாளித்தீர்கள்?பெங்களூரு மாநகராட்சியில் கடந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததே காரணம். ஏழைகள் பலரும் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அப்போது, காவிரி நீரை இலவசமாக விநியோகம் செய்ய 1,780க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் மையங்கள் திறக்கப்பட்டன. இது, வெறும் 15 நாட்களுக்குள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம், கடந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் சமாளிக்கப்பட்டது.காவிரி ஐந்தாம் கட்ட திட்டம் பற்றி?இத்திட்டத்திற்காக, கடந்த ஓராண்டாக இரவும், பகலுமாக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் ஆசியாவிலேயே, பெங்களூரில் அதிக கொள்ளளவு கொண்ட பெரிய நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைத்தது பெருமை. இதை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.அனைத்தையும் கடந்து திட்டம் செயல்படுத்தப்பட்டதால், ஒரு நாளைக்கு பெங்களூருக்கு கூடுதலாக 775 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இதனால் தான் நடப்பாண்டில் தண்ணீர் பிரச்னை தலை துாக்காமல் உள்ளது. இத்திட்டம் மூலம், 2028ம் ஆண்டு வரை பெங்களூரு பயனடையும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.காவிரி இல்லாமல் வேறு வழிகளில் எப்படி நீர் கிடைக்கிறது?பெங்களூரு நகருக்கான தண்ணீரில் காவிரி நீரின் பங்கு 65 சதவீதம்; நிலத்தடி நீர் மற்றும் மழை நீர் 35 சதவீதம். காவிரியில் இருந்து நீர் எடுப்பதற்கு ஒரு அளவு உண்டு. இதனால், முழுதுமாக காவிரியை நம்பி இருக்க கூடாது. இதனால், கிருஷ்ணா, ஷராவதி போன்ற நதிகளில் இருந்து நீரை எடுக்கலாம் என திட்டமிட்டு உள்ளோம். நிலத்தடி நீர் எடுப்பதற்கு, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களை பெங்களூரில் பயன்படுத்தலாம்.கழிவுநீர் மறுசுழற்சி திட்டம் எப்படி?கழிவுநீரை மறுசுழற்சி செய்வதன் மூலம் 80 சதவீதம் நீர் கிடைக்கும். எதிர்காலத்தில் மறுசுழற்சி தண்ணீரை பயன்படுத்துவது குறித்தே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் அதிகம் மறுசுழற்சி நீரை தான் பயன்படுத்துகின்றனர்.எனவே, பெங்களூரு, சென்னை, புதுடில்லி போன்ற பெரு நகரங்களில் ஆற்று நீர், நிலத்தடி நீரை மட்டும் நம்பி இருக்காமல், மறுசுழற்சி நீரை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். இதற்கு பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் முன்னோடியாக உள்ளது. இதற்காக ஐ.ஐ.டி.,யுடன் ஒப்பந்தம் செய்து, பாக்டீரியா இல்லாத சுத்தமான நீரை உருவாக்கி வருகிறோம். மறுசுழற்சி நீரை குடிக்க முடியுமா?ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர் நீர் உருவாக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கோலார், சிக்கபல்லாபூருக்கு விவசாயம் செய்வதற்காக விநியோகிக்கப்படுகிறது. வரும் நாட்களில் தேவனஹள்ளி, ஹெச்.ஏ.எல்., பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.நம் நாட்டின் கலாசார முறைப்படி, மறுசுழற்சி செய்த நீரை மக்கள் குடிப்பதில்லை. குடிநீர், சமையலுக்கு தவிர மற்ற வேலைகளுக்கு பயன்படுத்தலாம். குறிப்பாக, கட்டடங்கள் கட்டுவோர் பயன்படுத்த வேண்டும் என சட்டம் இயற்றி உள்ளோம்.புதிய முறையில் நீர் விநியோகம் திட்டம் உள்ளதா?பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம், 800 சதுர கி.மீ., அளவில் செயல்படும் மிகப்பெரிய வாரியம். இதில், 10,500 கி.மீ.,க்கு பைப் லைன்கள் உள்ளன. இதில், 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட குழாய்கள் உள்ளன.பெங்களூரு மலை பிரதேசத்தில் உள்ளதால், சில இடங்களில் தரைக்கு அடியில் இருந்து 1,000 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பம்ப் செய்து விநியோகம் செய்யப்படுகிறது. இதுபோன்று நீர் விநியோகம், இங்கு தான் நடக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் சமதளமான நிலப்பரப்பு உள்ளது. அங்கெல்லாம் தண்ணீரை பம்ப் செய்து விநியோகிக்க வேண்டிய அவசியம் இல்லை.தண்ணீர் கசிவை கண்டறிய ஏ.ஐ., தொழில்நுட்பமா?பம்ப் செய்து தண்ணீர் விநியோகிக்கும் போது, ஏற்படும் அழுத்தத்தால் பைப் லைன்கள் உடைந்து கசிவு ஏற்படுகிறது. இத்தகைய கசிவுகள் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு மூலம், கசிவுகள் ஏற்படக்கூடிய இடத்தை முன்கூட்டியை கண்டறிய முடியும்.பைப் லைன்களில் 350 கி.மீ., துாரத்திற்கு சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டன. இதன் மூலம், கசிவு ஏற்படும் இடம் முன்கூட்டியே தெரிந்து விடும். இதற்கான முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பங்களாகும். வரும் காலங்களில் புதிய தொழில்நுட்பம் மூலம் இப்பிரச்னையை சரி செய்ய முடியும்.காவிரி 6ம் கட்ட திட்டம் வருமா?'கிரேட்டர் பெங்களூரு' திட்டத்தால், தண்ணீரின் தேவை அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு 2050ம் ஆண்டு வரை தண்ணீர் கிடைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. காவிரி 6ம் கட்ட திட்டம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் குடிநீர் வாரியம் செயல்பட்டு வருகிறது.மொபைல் ஆப் மூலம் தண்ணீர் வழங்கப்படுமா?கடந்த ஆண்டு ஏற்பட்ட நீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, 'காவிரி ஆன் வீல்ஸ்' எனும் திட்டம் செயல்பட உள்ளது. இதன் மூலம் மக்கள், தங்கள் மொபைல் போனிலிருந்து காவிரி நீரை முன்பதிவு செய்யலாம். இதையடுத்து காவிரி நீர், வீடு தேடி லாரியில் வரும். இதை மொபைல் மூலம் கண்காணிக்க முடியும். இது இந்தியாவிலேயே முதன் முறை. குறைந்த கட்டணத்தில், தரமான தண்ணீரை பெற முடியும். இதற்கு துணை முதல்வர் சிவகுமார் பாராட்டு தெரிவித்து உள்ளார்.குடிநீர் இணைப்பு அதிகமாகுமா?நிலத்தடி நீர் பயன்பாட்டை குறைக்க, காவிரி நீர் இணைப்புகள் வழங்குவது அவசியம். இதற்கான கட்டண தொகையை ஒரே தடவையில் செலுத்த முடியாதோருக்காக, 'சரலக்காவிரி' எனும் திட்டம் கொண்டு வர உள்ளோம்.இதன்படி, கட்டண தொகையில் முதலில் 20 சதவீதம் கட்டினால் போதும்; குடிநீர் இணைப்பு வழங்கப்படும். மீதமுள்ள தொகையை 12 மாதங்களில் தவணை முறையில் செலுத்தலாம். இத்திட்டம் மே 7ம் தேதி அறிமுகமாகிறது. இதனால், புதிய குடிநீர் இணைப்புகள் கட்டாயம் அதிகரிக்கும்.குடிநீரை வீணாக்கியதற்கு எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது?கடந்த ஆண்டு முதல் குடிநீரை வீணாக்குபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பணத்திற்காக அபராதம் வசூலிக்கப்படவில்லை. நீரை வீணாக்க கூடாது என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே. இந்த ஆண்டு இதுவரை 412 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து 20.60 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.அதிக விலைக்கு தண்ணீரை விற்பது குறித்து?கடந்த ஆண்டு தண்ணீர் விற்பனைக்காக, 1,000க்கும் மேற்பட்ட, தனியார் டேங்கர் லாரிகள் பதிவு செய்யப்பட்டன. தண்ணீர் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களை கண்காணிப்பது, கடினமான பணி. எனவே, குறைந்த கட்டணத்தில் காவிரி தண்ணீரை வாரியமே விநியோகம் செய்யும் போது, தனியாரும் ஒரு குறிப்பிட்ட விலையை தாண்டி விநியோகம் செய்ய முடியாது.தரமான தண்ணீருக்கான சான்றிதழ்?பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம், சுத்தமான தண்ணீர் வழங்கியதற்காக பி.ஐ.எஸ்., எனும் இந்திய தரநிலைகள் பணியகம் சான்றிதழ் பெற்றுள்ளது. இச்சான்றிதழ் பெற்ற முதல் குடிநீர் வாரியம் என்ற பெருமையும் கிடைத்தது. சுத்தமான தண்ணீரை விநியோகிக்க, ஒரு ஆண்டுக்கு மேலாக முயற்சிகள் செய்யப்பட்டது. இதுபோன்ற பல சாதனைகள் செய்து வருவதால், உலக வங்கி 1,000 கோடி ரூபாய் கடன் வழங்க தயாராகி உள்ளது.மிட்டனஹள்ளி குப்பை கிடங்கு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து உள்ளதா?குப்பை கிடங்கு பகுதியில் கொட்டப்படும் மக்கிய பொருட்கள் மூலம் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அரசின் குடிநீர் குழாய்களில், சிலர் சட்ட விரோதமாக ஒட்டை போட்டு குடிநீரை உறிஞ்சுகின்றனர். இதன்பின், அந்த ஓட்டையை அடைக்காமல் அப்படியே விட்டு செல்கின்றனர். இதனால், குடிநீருடன் கழிவு நீர் கலக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், 48 சதவீதம் தண்ணீர் வீணாகிறது.இதை தடுக்க, 200 கோடி ரூபாய் அளவில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மீட்டர் பொருத்தியதன் மூலம் சட்டவிரோத குடிநீர் திருட்டை தடுக்க முடிந்தது. இதனால், 20 சதவீதம் நீர் பாதுகாக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் மாசு அடைவதும் தடுக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வாரியத்திற்கு ஏற்படும் இழப்பும் குறைந்தது. இதனால், ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்து உள்ளோம்.அரசுக்கு நன்றி!பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம், கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால், மக்களின் பாராட்டை தொடர்ந்து பெற்று வருகிறது. இதை குறிப்பிட்டு பல முறை இருவரும் பாராட்டி உள்ளனர். அவர்களின் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் வாரியத்தின் சார்பாகவும், எனது தனிப்பட்ட முறையிலும் நன்றி.எக்ஸ்குளூசிவ் லோகோ வைக்க வேண்டுகிறோம்.- நமது நிருபர் -பட விளக்கம்JPM_(9)_29 04 2025 BWSSBதரமான தண்ணீர் என்பதை மக்கள் முன் குடித்து காட்டும் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர்JPM_(8)_29 04 2025 BWSSBபம்பிங் ஸ்டேஷன் ஆய்வு பணிகள்JPM_(7)_29 04 2025 BWSSBகாவிரி ஐந்தாம் கட்ட திட்டம்.வாரியத்தின் பயனர்கள் விபரம் திருடப்பட்டுள்ளதா?குடிநீர் வடிகால் வாரியத்தின் பயனர்களின் அனைத்து தகவல்களும் அரசிடம் பாதுகாப்பாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு தனியார் நிறுவன செயலியும் செயல்பட்டு வந்தது. இதில், 10 லட்சத்திற்கும் அதிகமானோரின் தகவல்கள் இருந்தன. இவை, அவர்கள் பொறுப்பில் தான் இருந்தது.இந்நிலையில், லட்சக்கணக்கான பயனர்களின் தகவல்களை, சைபர் திருடர்கள் விற்பனை செய்து உள்ளதாக தகவல் கிடைத்தது. இது குறித்து உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் பயனர் தகவல்களை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.புத்தகம் வாசிப்பதால் சுறுசுறுப்புராம்பிரசாத் மனோகர் கூறுகையில், ''சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை போல உடல், மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, சிறப்பாக செயல்பட முடியும். அதிகாலையில் யோகா, உடற்பயிற்சி, புத்தகம் வாசிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கும், வலிமைக்கும் வழிவகுக்கிறது. பணியில் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் உடலை நன்றாக பார்த்து கொள்வது முக்கியம். இவை, அனைத்தையும் சரியாக செய்தால் கண்டிப்பாக சுறுசுறுப்பாக இருக்கலாம்,'' என்றார்.குடிநீர் கட்டணம் அதிகரிக்குமா?குடிநீர் கட்டணம் கடந்த 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில், கடந்த மாதம், ஏழை, எளியோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயர்த்தப்பட்டது. வரும் காலங்களில் ஆண்டுக்கு 3 சதவீதம் உயர்த்தப்படும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி