உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண்களின் மூட நம்பிக்கை அசுத்தமடைந்த பீமா ஆறு

பெண்களின் மூட நம்பிக்கை அசுத்தமடைந்த பீமா ஆறு

யாத்கிர்: பெண்களின் மூட நம்பிக்கையால், பீமா ஆறு முற்றிலும் அசுத்தம் அடைந்துள்ளது. குடிநீருக்கு பயன்படும் ஆறு, அவலநிலைக்கு ஆளானதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பெலகாவி மாவட்டம், சவதத்தியின் பிரசித்தி பெற்ற எல்லம்மா தேவியை, நாகதோஷம் பற்றியதாக கடந்த வாரம் யாத்கிரில் வதந்தி பரவியது. இந்த தோஷம் நிவர்த்தி ஆக வேண்டுமானால், பெண்கள் பீமா ஆற்றில் குளித்து, கங்கா பூஜை செய்ய வேண்டும். அவர்கள் அணிந்துள்ள சேலை, செருப்புகளை ஆற்றில் விட வேண்டும் என, தவறாக சிலர் நம்பினர். இதை உண்மை என நம்பி, நவம்பர் 20 அன்று, 3,000க்கும் மேற்பட்ட பெண்கள், பீமா ஆற்றங் கரையில் குவிந்தனர். ஆற்றில் குளித்து, தாங்கள் அணிந்திருந்த சேலை, செருப்புகளை அங்கேயே போட்டு, புதுச்சேலை அணிந்து கங்கா பூஜை செய்தனர். இதனால் பீமா ஆறு அசுத்தமானது. அதன்பின் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், ஆற்றுப்பகுதியை சுத்தம் செய்தனர். அதன்பின், 24ம் தேதியும், ஆயிரக்கணக்கான பெண்கள் பீமா ஆற்றுக்கு வந்து, பூஜை செய்தனர். பழைய சேலை, செருப்புகளை விட்டு சென்றனர். வெள்ளிக்கிழமையான நேற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆற்றில் புனித நீராடிய பின், தாங்கள் அணிந்திருந்த பழைய சேலை, வளையல்கள், செருப்புகளை ஆற்றிலும், ஆற்றங்கரையிலும் வீசி புத்தாடை, புது செருப்பு அணிந்து சென்றனர். ஆற்றங்கரை நெடுகிலும் சேலைகள், செருப்புகள், பூ, பழங்கள் குவிந்துள்ளன. தண்ணீரில் எண்ணெய் மிதக்கிறது. ஆற்றின் நீர் அசுத்தம் அடைந்துள்ளது. யாத்கிர் நகர மக்களுக்கு, பீமா ஆற்றில் இருந்தே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நீர் அசுத்தமடைந்துள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆற்றங்கரையில் வீசப்பட்ட பொருட்களின் துர்நாற்றத்தால் தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆற்றை காப்பாற்றும்படி, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி