பைக் டாக்சி இயக்கம்: சிறப்பு குழு அமைப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்சி இயக்குவது குறித்து வழிகாட்டுதல்களை உருவாக்க சிறப்பு குழுவை போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது. கர்நாடகாவில் பைக் டாக்சி இயக்குவதற்கு ஜூன் 16ம் தேதி தடை விதிக்கப்பட்டது. பைக் டாக்சி இயக்குவது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க, மாநில அரசுக்கு அவகாசம் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், மாநிலம் முழுதும் ராபிடோ, ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளில் பைக் டாக்சி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி திடீரென கடந்த சில நாட்களாக ராபிடோ, ஊபர் பைக் டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், செயலிகள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பைக் டாக்சி இயக்குவது குறித்த புதிய விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக சிறப்பு குழுவை போக்குவரத்து துறை அமைத்துள்ளது. இந்த குழுவினர் புதுடில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கட்டா ஆகிய நகரங்களுக்கு செல்வர். அங்கு பைக் டாக்சி இயக்குவது குறித்த விதி, சட்டங்கள், உரிமம் வழங்குவது, பயணியரின் பாதுகாப்பு ஆகியவை குறித்து, போக்குவரத்துச் செயலர் என்.வி.பிரசாத்திடம் இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழுவினர் சமர்ப்பிக்கும் அறிக்கை குறித்து, துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துவர். அதன்பின், பைக் டாக்சி இயக்குவது குறித்து அரசிடம் புதிய வழிகாட்டுதல்களை வழங்குவர். அரசும் ஆராய்ந்து வழி காட்டுதல்களை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.