பைக் டாக்சி போக்குவரத்து அரசுக்கு ஒரு மாதம் கெடு
பெங்களூரு : கர்நாடகாவில் பைக் டாக்சி போக்குவரத்தை முறைப்படுத்த ஒரு மாதத்துக்குள் விதிமுறைகளை தயாரித்து சமர்ப்பிக்கும்படி, மாநில அரசுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கர்நாடகாவில் பைக் டாக்சி போக்குவரத்துக்கு கர்நாடக அரசு தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஓலா நிறுவனம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனு, தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'பைக் டாக்சி, ஒரு சட்ட பூர்வமான தொழிலாக இருக்கலாம். ஆனால், சட் டம் அவர்களுக்கு வணிகம் நடத்துவதற்கான உரிமையை வழங்காது. விதிகள், ஒழுங்குமுறைகள் வகுக்கப்படாவிட்டால், அதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை' என்றார். நீதிபதிகள், 'பைக் டாக்சி சேவைகளை தொடருவதற்கான விதிகளை, ஒரு மாதத்திற்குள் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்' என்றனர்.