எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு மத்தியில் ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெறும் மசோதா
பெங்களூரு : எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு மத்தியில், 'ஜி ராம் ஜி' சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரும் மசோதா, கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக, ஜி ராம் ஜி என்ற புதிய சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும் மசோதாவை, சட்டசபையில் நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு ஆளுங்கட்சியினரும் எழுந்து நின்று கோஷம் எழுப்பியதால், சட்டசபை நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை சட்டசபை கூடியதும், மசோதாவின் மீது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினர். கலால் துறையில் நடந்த ஊழலுக்கு பொறுப்பு ஏற்று, அந்த துறையின் அமைச்சர் திம்மாபூர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இருக்கையை விட்டு எழுந்து வந்து, சபாநாயகர் இருக்கை முன்பு நின்று போராட்டம் நடத்தினர். இதை கண்டுகொள்ளாமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசினர். முக்கிய உறுப்பினர் பேசி முடித்ததும், தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பை, சபாநாயகர் காதர் வாசித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர் மசோதாவுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து காலவரையறை இன்றி, சட்டசபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.