உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திவால் மாடல் ஆப் கர்நாடகா விருது முதல்வருக்கு வழங்கிய பா.ஜ., அசோக்

திவால் மாடல் ஆப் கர்நாடகா விருது முதல்வருக்கு வழங்கிய பா.ஜ., அசோக்

பெங்களூரு: ''முதல்வர் சித்தராமையாவுக்கு, 'திவால் மாடல் ஆப் கர்நாடகா' விருது அளிக்கிறோம்,'' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல் அடித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மாநில அரசு திவால் ஆகியுள்ளது. கடன் வாங்கி, ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கும் சூழ்நிலைக்கு வந்துள்ளது. என்ன சாதனை செய்தீர்கள் என்பதற்காக, சாதனை மாநாடு நடத்தி கொண்டாடுகிறீர்கள். இரண்டு ஆண்டுகளில் என்ன வெட்டி முறித்தீர்கள்.

விலை உயர்வு

பால் விலை, குடிநீர், மின் கட்டணம், பெட்ரோல், டீசல், சொத்து வரியை உயர்த்தினீர்கள். விலை உயர்வால் மக்கள் பரிதவிக்கின்றனர். மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது, சாதனை மாநாடு நடத்த வேண்டும் என, உங்களுக்கு எப்படி தோன்றியது. விவசாயிகள் தற்கொலை, குழந்தை பெற்ற பெண்கள் இறந்ததற்காக, இம்மாநாடா?எஸ்.சி., பிரிவினருக்கு சொந்தமான 187 கோடி ரூபாயை, கொள்ளை அடித்தீர்கள். 89 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக, முதல்வர் சித்தராமையாவே, சட்டசபையில் கூறியுள்ளார். அதற்காக இம்மாநாடா.'முடா'வில் வாஸ்து முறைப்படி உள்ள 14 மனைகளை பெற்றதற்காக, கொண்டாடுகிறீர்களா.தரமற்ற மருந்தால், மருத்துவமனைகளில் தினமும் 15 முதல் 20 பெண்கள் இறக்கவில்லையா. அரசு மருத்துவமனைக்கு சென்றால், உயிருடன் திரும்புவதே இல்லை என்பதே, அரசின் சாதனையா. மாநிலத்தில் 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

அமைச்சர்கள் கதறல்

ஆனால், குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் தற்கொலை செய்வதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.வறட்சி ஏற்பட வேண்டும் என, விவசாயிகள் விரும்புவதாக மற்றொரு அமைச்சர் கூறுகிறார். இதற்காக சாதனை மாநாடா.வக்ப் வாரியம் பெயரில், லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம், கோவில் சொத்துகளை கொள்ளை அடிக்கவில்லையா. கே.பி.எஸ்.சி., வினாத்தாளை தயாரிக்க, இந்த அரசுக்கு யோக்கியதை இல்லை. போலீஸ் வாகனத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி, நீரில் கரைத்தீர்கள்.மழையால் ஐந்து பேர் உயிரிழந்தனர். ஆனால் நீங்கள் சாதனை மாநாடு நடத்தினீர்கள். பெங்களூரு மக்கள், அதிக அளவில் வரி செலுத்துகின்றனர். இப்படிப்பட்டவர்களை நீரில் மூழ்க விட்டீர்கள். பெங்களூரை மிதக்க விட்டதற்காக மாநாடா.

பாராட்டு

பால் விலையை மூன்று முறை, ஒன்பது ரூபாய் உயர்த்தினீர்கள். இதில் விவசாயிகளுக்கு எவ்வளவு தொகையை கொடுத்தீர்கள். கர்நாடகாவில் அதிகமான பார்கள், ஒயின் ஷாப்கள் திறந்தீர்கள். இதற்காக எதிர்க்கட்சிகளான நாங்கள் பாராட்டுகிறோம்.சாம்ராஜ்நகர், மாண்டியா, ராய்ச்சூர் உட்பட ஒன்பது பல்கலைக்கழகங்களை ஏன் மூடினீர்கள். இவற்றை நடத்த 250 கோடி ரூபாய் தேவைப்பட்டது. உங்களுக்கு பார்கள், ஒயின் ஷாப்களில் இருந்து கிடைக்கும் பணத்தில், 10 சதவீதம் செலவிட்டாலே ஏழை மாணவர்களின் விருப்பம் நிறைவேறி இருக்கும்.மாநிலத்தின் 40 அரசு நிறுவனங்கள் திவால் ஆகியுள்ளன. அரசு சார்ந்த 60 தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன. இந்நிறுவனங்கள் 46,800 கோடி ரூபாய் கடனில் உள்ளன. சுற்றுலாத்துறை, கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., வட மேற்கு போக்குவரத்து கழகம், ராஜிவ் காந்தி வீட்டுவசதி கார்ப்பரேஷன், மைசூரு பேப்பர் மில்ஸ், பெஸ்காம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே முதல்வர் சித்தராமையாவுக்கு, 'திவால் மாடல் ஆப் கர்நாடகா' விருது அளிக்கிறோம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி