ஹாசனாம்பா உத்சவத்தில் ஊழல் விசாரணைக்கு பா.ஜ., கோரிக்கை
ஹாசன்: ‘‘கடந்தாண்டு நடந்த ஹாசனாம்பா உத்சவத்தில், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,’’ என பா.ஜ., மூத்த தலைவர் தேவராஜே கவுடா குற்றம்சாட்டினார். இது குறித்து ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்தாண்டு ஹாசனாம்பா உத்சவம் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பெற்ற ஆவணங்களின்படி 14 நாட்கள் நடந்த உத்சவத்துக்கு 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளனர். இதில் 9 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்துள்ளன. உத்சவ துவக்க நாளன்று, எந்த விதமான கலை நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. ஆனால் நடக்காத நிகழ்ச்சிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் பில் தொகை வழங்கப்பட்டுள்ளது. லட்டு பிரசாதம் வினியோகிக்க 99.75 லட்சம் ரூபாய், அன்ன பிரசாதம் வினியோகிக்க 85 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வரிசையில் நிற்க தடுப்பு, ஜெர்மன் டென்ட் அமைக்க, மேட் மற்றும் மின் விசிறிகளுக்காக 98 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளனர். ஷாமியானா, எல்.இ.டி.,, மைக் வசதிக்கு 50 லட்சம் ரூபாய், லைட்டிங் பொருத்த 80 லட்சம் ரூபாய், தற்காலிக கழிப்பறைகள், கட்டுப்பாட்டு அறை அமைக்க, தலா 60 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. கண்மூடித்தனமாக, தேவைக்கு அதிகமான தொகையை செலவிட்டுள்ளனர். ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகையை வழங்கிய பின், கமிஷன் பெற்றுள்ளனர். இந்த பணத்தில் புதிய கார்கள், தங்க நகைகள், விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்களை வாங்கியுள்ளனர். கடந்தாண்டு ஹாசனாம்பா உத்சவத்தில் நடந்த ஊழல் குறித்து, விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.