முதல்வர் பதவி விலக கோரி பா.ஜ., நாளை போராட்டம்
பெங்களூரு:''கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக, முதல்வர், துணை முதல்வர் பதவி விலக கோரி, பெங்களூரில் நாளை போராட்டம் நடத்த மாநில பா.ஜ., முடிவு செய்துள்ளது,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., கோபாலய்யா தெரிவித்தார்.பெங்களூரு பா.ஜ., அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் பதவி விலக கோரி, நாளை சுதந்திர பூங்காவில் பா.ஜ., போராட்டம் நடத்தும். பின், முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம். விதான் சவுதாவில் நடந்தது கிரிக்கெட் வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி அல்ல; அவமானகரமான நிகழ்ச்சி.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தின் நான்கு வாயில்கள் மட்டுமே திறக்கப்பட்டன. 21 வாயில்கள் திறக்கப்படவில்லை. விதான் சவுதா முன்பும் இதுபோன்ற கூட்டம் இருந்தது. அங்கிருந்த சிலர், மரங்களின் மீது அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்தனர்.சின்னசாமி மைதானம் அருகில் நடந்த நெரிசலில் பலர் மரணடைந்த செய்தி, தாமதமாக முதல்வருக்கு சென்றடைந்தது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தேவையில்லை. அவர்களின் குழந்தைகள் மட்டுமே தேவை.அவர்களின் சாபம், இந்த அரசின் மீது விழும். இந்த நிகழ்வை நடத்த வேண்டாம் என்று டி.சி.பி., - டி.பி.ஏ.ஆர்.,க்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், உங்கள் தவறை மறைக்க, போலீஸ் துறை மீது நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்.இதற்கு பதில் சொல்லாமல், மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி, இவ்விஷயத்தை திசை திருப்ப முயற்சித்துள்ளனர். இதற்காக செலவிடப்பட்ட 165 கோடி ரூபாய் என்ன ஆனது.இவ்வாறு அவர் கூறினார்.