பா.ஜ.,வின் அரசியல் யாத்திரை ஆதாயமாகாது: சித்தராமையா
மைசூரு : ''பா.ஜ., நடத்துவது அரசியல் யாத்திரை; இதன் மூலம் அவர்களால் ஆதாயம் பெற முடியாது. எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டபோது அவர்கள் ஏன் யாத்திரை செல்லவில்லை?,'' என, முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார். மைசூரில் தன் சொந்த ஊரான சித்தராமனஹுன்டியில் கர்நாடக பப்ளிக் பள்ளியை நேற்று திறந்து வைத்த பின், அவர் அளித்த பேட்டி: பா.ஜ.,வினர் நடத்தும் யாத்திரைகளால் ஹிந்துத்துவா பலமாகும் என்று அவர்கள் கருதுகின்றனர்; ஆனால் பலமாகாது. நானும் ஹிந்து தான்; நாம் அனைவரும் ஹிந்து தான். என் கிராமத்தில் ராமர் கோவில் கட்டி உள்ளேன். மனிதநேயம் உள்ளவர்களே ஹிந்துக்கள்; பொய் பேசி, தவறான தகவல்களை பரப்புபவர்கள் அல்ல. மனிதத்தன்மையின்றி நடப்பவர்கள் ஹிந்துக்கள் அல்ல. பா.ஜ.,வினர் தசராவையும் அரசியல் ஆக்குகின்றனர். அவர்களுக்கு தேவைப்பட்டால், அவர்களின் வீட்டையும் அரசியலாக்குவர். பொய்யை தவிர, அவர்களுக்கு வேறு என்ன தெரியும்? இவர்களின் போராட்டத்தால் தசராவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஹிந்துக்கள் அனைவரும் பா.ஜ.,வுடன் இல்லை. துணை முதல்வர் சிவகுமார் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது. இப்போது தசராவை யார் துவக்கி வைப்பது என்பது தான் பிரச்னை; சாமுண்டி மலை பற்றியது அல்ல. நான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியில் புதிதாக கட்டடம் கட்டித் தந்துள்ளேன். இந்த ஊரில் துவக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, பி.யு., கல்லுாரிகள், அனைத்து வகையான மருத்துவ சேவை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது. இம்மக்களுக்கு எப்போதும் நான் கடமைப்பட்டிருப்பேன். கர்நாடகாவை சேர்ந்த பானு முஷ்டாக், புக்கர் பரிசு பெற்றுள்ளார். அவரை கவுரவிக்க இதை விட சிறந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காது. பா.ஜ.,வின் அரசியல், தசராவுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சாமுண்டி மலை ஹிந்துக்களின் சொத்தாக இருக்கலாம். தசரா திருவிழா, தேசிய திருவிழாவாகும். தேசிய திருவிழா என்றால் அனைவரும் ஒன்றாக கொண்டாடுவது என்று பொருள். இது ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பவுத்தர்கள் ஒன்றாக கொண்டாடும் திருவிழாவாகும். இவ்வாறு அவர் கூறினார்.