பி.ஓ.பி., விநாயகர் சிலை மா.க., வாரியம் எச்சரிக்கை
பெங்களூரு: ''பி.ஓ.பி., எனும் பிளாஸ்டர் ஆப் பாரிசால் விநாயகர் சிலை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கே.எஸ்.பி.சி.பி., எனும் கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் நரேந்திர சுவாமி எச்சரித்துள்ளார்.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 27ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது. சிலைகளை செய்யும்போது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பி.ஓ.பி.,யை உபயோகப்படுத்தக் கூடாது என அரசு கடந்த சில ஆண்டுகளாகவே அறிவித்து வருகிறது.இருப்பினும், நகரில் உள்ள சேஷாத்திரிபுரம், ஆர்.வி., சாலைகளில் பி.ஓ.பி.,யால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் உயரம் 3 முதல் 5 அடியாக உள்ளது. இந்த சிலைகள் செய்யும் செலவு குறைவு. சிலை உறுதியுடனும், எளிதில் உடையாமல் இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து கே.எஸ்.பி.சி.பி., தலைவர் நரேந்திர சுவாமி கூறியதாவது:கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2016 ஜூலையில், பி.ஓ.பி.,யால் விநாயகர் சிலை செய்ய தடை விதித்தது. 2017ல் கர்நாடக உயர் நீதிமன்றம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை முன்னிட்டு, இந்த தடையை உறுதி செய்து உத்தரவை பிறப்பித்தது.இருப்பினும், பி.ஓ.பி., சிலைகள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. இது போன்ற சிலைகள் செய்யப்படும் இடங்கள் குறித்து, தகவல் கிடைத்தால் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.சிலை செய்பவர்கள் மீதும் சட்டம் பாயும். இது குறித்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.