பஸ் ஓட்டும் போது ஓட்டுநருக்கு மாரடைப்பு பயணியரை காப்பாற்றி விட்டு உயிரிழந்தார்
நெலமங்களா: பஸ் ஓட்டும்போது, ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பயணியரை காப்பாற்றிவிட்டு அவர் உயிரிழந்தார். கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றியவர் ராஜிவ் பிரதார், 50. இவர் நேற்று காலை, பெங்களூரின் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, தாவணகெரேவின் ஹரிஹராவுக்கு பயணியரை ஏற்றிக்கொண்டு ராஜஹம்சா பஸ்சில் புறப்பட்டார். பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா சுங்கச்சாவடி அருகில் பஸ் சென்றபோது, ராஜிவுக்கு இதய வலி ஏற்பட்டது. தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உணர்ந்த ராஜிவ், உடனடியாக சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, அப்படியே இருக்கையில் சரிந்தார். மயங்கிய ஓட்டுநரை, பயணியர் ஆம்புலன்ஸ் வரவழைத்து, மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் ராஜிவ் உயிரிழந்தார். பஸ்சை ராஜிவ் சாமர்த்தியமாக நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அனைத்து பயணியரும் உயிர் தப்பினர்.