உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல்!: 90 நாட்களில் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு

மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல்!: 90 நாட்களில் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு

கர்நாடகாவில் சித்தராமையா முதன் முறையாக, 2013ல் முதல்வரான போது, 2015ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. நடப்பாண்டு மார்ச்சில் தான், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு ஆளும் கட்சியில் சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலிடம் உத்தரவு

இதற்கிடையில், கட்சி மேலிடம் அழைப்பின்படி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் டில்லி சென்றிருந்தனர். அப்போது கட்சி மேலிடம், மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்படி உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு பின், முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் 6.11 கோடி பேர் இருந்தனர். இது, 2015ல் 6.35 கோடியாக உயர்ந்தது. 2015 ஏப்ரல் முதல் 2015 மே வரையில், 5.98 கோடி மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு பணியில், 1.33 லட்சம் ஆசிரியர்கள் உட்பட 1.60 லட்சம் பேர் ஈடுபட்டனர்.

குமாரசாமி மறுப்பு

நான் 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது, கணக்கெடுப்பு நடத்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு நிரந்தர கமிஷன் அறிக்கையும், பரிந்துரைகளும் இறுதி செய்யப்படவில்லை. அதன்பின், ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது. அப்போது முதல்வராக குமாரசாமி இருந்தார். பிற்படுத்தப்பட்ட பிரிவு அமைச்சராக புட்டரங்க ஷெட்டி இருந்தபோது, அறிக்கை முழுமை பெற்றது.கமிஷனின் தலைவராக இருந்த காந்தராஜு, அமைச்சர் புட்டரங்க ஷெட்டியும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டு கொண்டனர். ஆனால், முதல்வராக இருந்த குமாரசாமி ஏற்கவில்லை.காந்தராஜுவின் பதவி காலம் முடிந்தபேது, பா.ஜ., அரசு அமைந்தது. அந்த அரசு, கமிஷனின் தலைவராக ஜெயபிரகாஷ் ஹெக்டேவை நியமித்தது. பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.ஜெயபிரகாஷ் ஹெக்டேவுக்கு கிடைத்த தரவுகள்படி, பரிந்துரைகளை தெரிவித்தார். 2024 பிப்., 29ல் இந்த பரிந்துரைகள், எங்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது கமிஷனின் முன்னாள் தலைவர் காந்தராஜுவும் உடன் இருந்தார்.அப்போது லோக்சபா தேர்தல் நெருங்கியதால், இந்த பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை. பின், 2025ல் எங்கள் அரசு, அமைச்சரவையில் அறிக்கையை தாக்கல் செய்தது. அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

புதிய கணக்கெடுப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக, டில்லிக்கு வரும்படி, என்னையும், துணை முதல்வர் சிவகுமாரையும் கட்சி மேலிட தலைவர்கள் அழைத்தனர். அப்போது, 'இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டதால், பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்' என்றனர்.கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் சமூக மற்றும் கல்வி கணக்கெடுப்பு ஆணைய திருத்த மசோதா (2014) பிரிவு 11 (1)ன்படி, நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முடிந்து, 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, புதிதாக கணக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடம் உள்ளது. எனவே முந்தைய கணக்கெடுப்பு பட்டியல் நீக்கப்பட்டு, புதிய கணக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்துள்ளது. வரும் நாட்களில் கமிஷனின் ஆலோசனை பெறப்படும்.ஓய்வு பெற்ற அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக உள்ளார். உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இரண்டொரு நாட்களில் நியமிக்கப்படுவர்.மத்திய அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவித்து உள்ளதே தவர, கல்வி, சமூக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறவில்லை. சமூக நீதிக்காக, எங்கள் அரசு கணக்கெடுப்பு நடத்தும். அண்டை மாநிலமான தெலுங்கானாவில், இத்தகைய கணக்கெடுப்புக்கு 70 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நம் மாநிலத்தில், 90 நாட்களுக்குள் கணக்கெடுப்பு நடத்த கமிஷனுக்கு காலக்கெடு விதிக்கப்படும்.இவ்விஷயத்தில் பா.ஜ., குற்றச்சாட்டில் உண்மையில்லை. லிங்காயத், ஒக்கலிகர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் குறித்து விவாதிக்கவில்லை. விதிகளின்படி விவாதிக்கப்படும். அனைத்து ஜாதிகளின் ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ