உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் அடுத்த மாதம் நடக்கிறது... அமைச்சரவை மாற்றம்!; முதல்வர் சித்தராமையா பகிரங்க அறிவிப்பு

கர்நாடகாவில் அடுத்த மாதம் நடக்கிறது... அமைச்சரவை மாற்றம்!; முதல்வர் சித்தராமையா பகிரங்க அறிவிப்பு

பெலகாவி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில், கர்நாடகாவில் அடுத்த மாதம் அமைச்சரவையில் மாற்றம் நடக்க உள்ளது என்று, முதல்வர் சித்தராமையா பகிரங்கமாக அறிவித்து உள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதத்துடன் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிகிறது. மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு பதில் இரண்டு, மூன்று முறை வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவியை, கட்சி மேலிடம் கொடுத்தது. ஆனால் சில அமைச்சர்கள், மேலிடத்தின் எதிர்பார்ப்பின்படி செயல்படவில்லை. இதனால், அவர்களை நீக்கிவிட்டு மூத்த எம்.எல்.ஏ.,க்கள், புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மேலிடம் திட்டமிட்டது. அக்டோபர் அல்லது நவம்பரில் அமைச்சரவையில் மாற்றம் நடக்கலாம் என்று பேச்சு அடிபட்டது. கடந்த சில தினங்களுக்கு முன், அமைச்சர்களுக்கு, சித்தராமையா இரவு உணவு வைத்தார். இதில், அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதை சித்தராமையா மறுத்தார். மேலிடம் இந்நிலையில், பெலகாவியில் நேற்று சித்தராமையா அளித்த பேட்டி: கர்நாடக அமைச்சரவையை மாற்றி அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி, கட்சி மேலிடம் நான்கு மாதங்களுக்கு முன்பே என்னிடம் கூறியது. இரண்டரை ஆண்டுகள் முடிந்த பின், அமைச்சரவையை மாற்றி அமைக்கலாம் என்று நான் கூறினேன். அடுத்த மாதத்துடன், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. அந்த மைல்கல்லை எட்டியதும், நான் டில்லிக்கு சென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவேன். அவர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன். நவம்பர் 16ம் தேதி டில்லி செல்கிறேன். மூத்த வக்கீல் கபில் சிபில் எழுதிய, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். பின், மேலிட தலைவர்களை சந்தித்து மாநில நிர்வாகம், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி எடுத்து கூறுவேன். நான் டில்லி சென்று வந்த பின், அமைச்சரவையில் மாற்றம் நடக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். பின்னணி இதற்கிடையில், 'கட்சி மேலிடம் கூறினால் அமைச்சர் பதவியை தியாகம் செய்ய தயார்' என்று, கிருஷ்ணபைரேகவுடா, ஜமீர் அகமதுகான், பிரியங்க் கார்கே அறிவித்து உள்ளனர். வரும் நாட்களில், சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் சிலர், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அறிவிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியிலும் அரசியல் உள்ளது. சித்தராமையா, தனது ஆதரவு அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து, முதல்வர் பதவியை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டில்லி பயணம் இந்நிலையில், துணை முதல்வர் சிவகுமார் நேற்று திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் கூறுகையில், ''நான் டில்லிக்கு செல்வது புதிது இல்லை. எனக்கு வேலை இருக்கும்போது அங்கு செல்கிறேன். கட்சி மேலிட தலைவர்களை சந்திக்கிறேன். ' 'வழக்கு விசாரணைக்கு செல்கிறேன். அமைச்சரவையில் மாற்றம் குறித்து என்னிடம் சரியான தகவல் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால், முதல்வர் என்னுடன் கண்டிப்பாக விவாதிப்பார்,'' என்றார். நீண்ட நாள் எதிர்பார்ப்பான அமைச்சரவை மாற் றம் அடுத்த மாதம் நடக்க இருப்பதால், எம்.எல்.ஏ.,க்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எப்படியாவது அமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். பா.ஜ., அரசில் துணை முதல்வராக இருந்து, காங்கிரசில் இணைந்து எம்.எல்.ஏ., ஆன லட்சுமண் சவதி, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணா, சிவலிங்கேகவுடா, பேலுார் கோபாலகிருஷ்ணா உட்பட இரண்டு டஜன் எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சராகும் ஆர்வத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ