உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கனடா - உடுப்பி மணமக்களுக்கு காணொளி மூலம் நிச்சயதார்த்தம்

 கனடா - உடுப்பி மணமக்களுக்கு காணொளி மூலம் நிச்சயதார்த்தம்

உடுப்பி: விடுமுறை கிடைக்காததால் கனடாவில் வசித்து வரும் கர்நாடகாவின் மணமகனுக்கும், உடுப்பியை சேர்ந்த மணமகளுக்கும் காணொளி மூலம் நிச்சயதார்த்தம் நடந்தது. பெங்களூரு தெற்கு மாவட்டம், மாகடியை சேர்ந்தவர் சுஹாஸ். தற்போது கனடாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், உடுப்பியை சேர்ந்த மேகா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று இருவருக்கும் உடுப்பியில் உள்ள சரஸ்வதி சபா பவனில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மணமகன் சுஹாசுக்கு, விடுமுறை கிடைக்கவில்லை. இரு வீட்டினரும் செய்வதறியாது நின்றிருந்தபோது, காணொளி மூலம் நிச்சயதார்த்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக மண்டபத்தில் பெரிய எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டது. அதன்படி, சரஸ்வதி சபா பவனில் நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டினரும் செய்தனர். இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே, 12 மணி நேரம் வித்தியாசம் உள்ளது. இங்கு காலை என்றால், கனடாவில் நள்ளிரவாகும். சுஹாசுடன் அவரது நண்பர்கள் இருந்தனர். வீடியோ மூலம் மணமகனும், மணமகளும் கேமரா முன் நின்று, மோதிரம் மாற்றிக் கொண்டனர். அதன் பின், குடும்பத்தினர் இருவருக்கும் அட்சதை துாவி ஆசிர்வதித்தனர். இவர்களுக்கு ஜன., 7, 8ம் தேதிகளில் உடுப்பியில் திருமணம் நடக்கிறது. காணொளி மூலம் நடந்த நிச்சயதார்த்தம், இரு வீட்டினரிடையே குதுாகலத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி