உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சேவல் சண்டைக்கு ஆதரவு; காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு

 சேவல் சண்டைக்கு ஆதரவு; காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு

மங்களூரு: சேவல் சண்டைக்கு ஆதரவாக பேசிய, புத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக்குமார் ராய் மீது வழக்கு பதிவாகி உள்ளது. தட்சிண கன்னடாவின் பன்ட்வால் தாலுகா கேபு கிராமத்தில் உள்ளத்தி துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது, கோவில் வளாகத்தில் சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் சேவல் சண்டை நடந்தது. இதுபற்றி அறிந்த விட்டலா போலீசார் அங்கு சென்றனர். அனுமதியின்றி நடத்துவதாக கூறி, சேவல் சண்டையை நிறுத்தினர். இதுபற்றி அறிந்ததும் புத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக்குமார் ராய் அங்கு வந்தார். கோவில் திருவிழாவின் போது சேவல் சண்டை நடத்துவது பல ஆண்டுகளாக நடக்கிறது. 'நீங்கள் புதிதாக ஏன் சட்டம் போடுகிறீர்கள். இது பாரம்பரிய விளையாட்டு. குதிரை பந்தயத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்குகிறீர்கள். சேவல் சண்டை போடுவதால் என்ன நடந்து விடும்' என்று, போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். பின், அப்பகுதி மக்களிடம், 'நீங்கள் சேவல் சண்டையை நடத்துங்கள்' என்று கூறினார். இதையடுத்து ஏராளமானோர் தங்கள் சேவல்களை சண்டைக்கு விட்டு போட்டி நடத்தினர். இதையடுத்து எம்.எல்.ஏ., கண்முன்னே 22 சேவல்களை பறிமுதல் செய்த போலீசார், போலீஸ் வேனில் எடுத்து சென்றனர். அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அசோக்குமார் ராய் உட்பட 17 பேர் மீது விட்டலா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி