இளம்பெண்ணை ஏமாற்றிய காதலர் குடும்பத்தினர் மீது வழக்கு
உத்தர கன்னடா: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, வேறு பெண்ணை திருமணம் செய்த நபரையும், பெற்றோரையும் போலீசார் தேடி வருகின்றனர். உத்தர கன்னடா மாவட்டம், பட்கல்லின் மருகேரியை சேர்ந்தவர் கணேஷ் கிருஷ்ணா, 28; ஆட்டோ ஓட்டுநர். இவரும், இளம்பெண் ஒருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, நெருக்கமாக பழகினார். பின், திருமணம் குறித்து இளம்பெண் பேசும்போதெல்லாம், ஏதோவது ஒரு பொய் சொல்லி கணேஷ் கிருஷ்ணா சமாளித்து வந்தார். பொய் சொல்லி, இளம்பெண்ணின் கருவையும் கலைக்க வைத்தார். இதையறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், பட்கல் ரூரல் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரிடம், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கணேஷ் கிருஷ்ணா உறுதியளித்தார். ஆனால், கடந்த வாரம் அவருக்கு வேறொரு பெண்ணுடன் ரகிசயமாக திருமணம் நடந்தது. இந்த புகைப்படம், இளம் பெண்ணுக்கு யாரோ அனுப்பினர். இதை பார்த்த அவர், போலீசில் பெற்றோருடன் புகார் அளித்தார். இதையடுத்து, கணேஷ் கிருஷ்ணா உட்பட அவரது குடும்பத்தினர் ஏழு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த கணேஷ் கிருஷ்ணா குடும்பத்தினர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.