திருட்டு நகைகள் சுருட்டல் இன்ஸ்., ஏட்டுகள் மீது வழக்கு
பெங்களூரு : திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட தங்க நகைகளை உரியவர்களிடம் சேர்க்காமல் சுருட்டியது குறித்து, இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுகள் மீது புகார் பதிவாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சுதாகரனும், அவரது கூட்டாளிகளும் பெங்களூரின் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடினர். இவர்கள் மீது பெங்களூரின் சூர்யாநகர் உட்பட வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் பதிவாகியுள்ளன. கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு உட்பட பல கோணங்களில் விசாரணை நடத்திய சூர்யாநகர் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ்குமார் மஹாஜன் தலைமையிலான போலீசார், சமீபத்தில் சுதாகரன், அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். இவர்களிடம் திருட்டு நகைகள் வாங்கியவர்களிடம் இருந்து 2 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. ஆனால், 200 கிராம் நகைகள் மீட்கப்பட்டதாக துறைக்கு கணக்கு காட்டியுள்ளனர். அவற்றை மட்டும் உரியவர்களிடம் சேர்த்தனர். மீதமுள்ள நகைகளை சூர்யாநகர் போலீசாரே பங்கிட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சமூக ஆர்வலரும், வக்கீலுமான வெங்க டாசலபதி என்பவர், பெங்களூரு மத்திய மண்டல ஐ.ஜி.பி., லாபூராமிடம் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த லாபூராம், இன்ஸ்பெக்டர் சஞ்சீவ்குமார் மஹா ஜன் மற்றும் ஏட்டுகள் மீது வழக்குப் பதிவு செய்து, துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.