போலீஸ் ஏட்டை அரிவாளால் வெட்டிய மனைவி மீது வழக்கு
கக்கலிபுரா: குடும்ப தகராறில், ஏட்டுவை அரிவாளால் வெட்டிய மனைவி மீது வழக்குப் பதிவாகியுள்ளது. பெங்களூரு, கக்கலிபுராவின் கிருஷ்ணப்பா லே - அவுட்டில் வசிப்பவர் ககன் குமார், 28. இவர் கக்கலிபுரா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுகிறார். இவருக்கு 'பேஸ்புக்' மூலமாக பிரியங்கா, 24, அறிமுகமானார். பிரியங்கா ஹாசன் மாவட்டம், ஆலுாரை சேர்ந்தவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களுக்கு திருமணம் ஆனது. தம்பதிக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. ககன் குமார், தன் பெற்றோருக்காக, லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு சொந்த ஊரில் வீடு கட்டினார். இது அவரது மனைவி பிரியங்காவுக்கு பிடிக்கவில்லை. பணம் கொடுத்தது குறித்து, கணவரிடம் சண்டை போட்டார். மாமனார், மாமியாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் தம்பதிக்கிடையே, மனஸ்தாபம் ஏற்பட்டது. நேற்று முன் தினம் காலையில், மகனை பள்ளியில் விடும்படி கணவரிடம் கூறினார். அவர் மறுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோ பம் அடைந்த மனைவி, அரிவாளால் கணவரை தாக்கிவிட்டு, கதவை வெளிப்புறமாக தாழிட்டு, மகனை அழைத்துக் கொண்டு, வீட்டில் இருந்து வெளியேறினார். மனைவியின் தாக்குதலுக்கு ஆளான ககன் குமார், எஸ்.ஐ.,க்கு போன் செய்து நடந்ததை கூறினார். அங்கு வந்த எஸ்.ஐ., பூட்டை உடைத்து, ககன் குமாரை அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது மனைவி பிரியங்கா மீது, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.