உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  2 மாணவியர் மாயமான வழக்கு சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பு

 2 மாணவியர் மாயமான வழக்கு சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பு

பெங்களூரு: இரண்டு மாணவியர், காணாமல் போய் மூன்று மாதங்களாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், வழக்கு சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெங்களூரின், வித்யாரண்யபுராவில் வசித்தவர் தனிஷ்கா, 18. இரண்டாம் ஆண்டு பி.யு.சி., மாணவியான இவர், தன் ஜூனியர் மாணவியான தேஜஸ்வினி, 17, என்பவருடன் நடப்பாண்டு ஜனவரி 31ல், மாயமானார். மாணவியர் வெறும் 3,000 ரூபாய் பணம், ஆதார் கார்டு கொண்டு சென்றுள்ளனர். மகள்களை காணவில்லை என, வித்யாரண்யபுரா போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசாரும் தனிப்படை அமைத்து, மாணவியரை தேடினர். கர்நாடகாவின் பல்வேறு நகரங்கள் உட்பட, நாட்டின் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் தேடியும், அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாணவியர் மொபைல் போன் பயன்படுத்தவில்லை. ஏ.டி.எம்., கார்டு, கிரெடிட் கார்டும் பயன்படுத்தவில்லை. இதனால் அவர்களை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதற்கிடையே மகள்களை கண்டுபிடித்து தரும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பெற்றோர் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றமும் மாணவியரை கண்டுபிடிக்க போலீசாருக்கு, ஒரு மாதம் கால அவகாசம் அளித்தது. ஆனால் போலீசார் பல கோணங்களில் விசாரித்தும் ப யன் இல்லை. மாணவியர், கடைசியாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தின், மலை மஹாதேஸ்வராவுக்கு சென்றது தெரிந்தது. போலீசார் அங்கு செல்வதற்குள், மாணவியர் அங்கிருந்து சென்றுவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் காலக்கெடு முடிந்தும், மாணவியரை பற்றி எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. மாணவியர் காணாமல் போய், மூன்று மாதங்கள் கடந்துள்ளது. எனவே இந்த வழக்கை சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளையும், சி.ஐ.டி.,யிடம், வித்யாரண்யபுரா போலீசார் ஒப்படைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி