காவிரியில் வெள்ளம்: தப்பிய தந்தை, மகன்
மைசூரு : மாடு மேய்க்க சென்றபோது, காவிரி ஆற்றின் வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன் மரத்தில் ஏறி உயிர் தப்பினர்.மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தாலுகாவின், மாகனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ண கவுடா, 50. இவரது மகன் பிரவீன், 25. தந்தையும், மகனும் நேற்று முன்தினம் காலை, மாடுகளை மேய்க்க கிராமத்தின் அருகில் உள்ள காவிரி ஆற்றங்கரைக்கு வந்தனர். மாடுகளை அங்கு மேய்ச்சலுக்கு விட்டனர்.நீர் குறைவாக இருந்ததால், தந்தையும், மகனும் ஆற்றை கடந்து மற்றொரு கரையில் உள்ள தேவி தோப்புக்கு சென்று ஓய்வெடுத்தனர். மாலை வீடு திரும்ப தயாரானபோது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்திருந்தது. அவர்களால் கடக்க முடியவில்லை. தோப்பிலும் வெள்ளம் சூழ்ந்ததால், அங்கிருந்த மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர்.மாடு மேய்க்க சென்றவர்கள் இரவாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தேட துவங்கினர். கண்டுபிடிக்க முடியாததால், பன்னுார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் நேற்று காலை ஆற்றங்கரைக்கு வந்து தேடியபோது, தந்தையும், மகனும் மரத்தின் மீது அமர்ந்திருப்பது தெரிந்தது.பரிசல் ஓட்டும் உமேஷ் என்பவரை வரவழைத்து, பரிசலை அனுப்பி தந்தை, மகனை மரத்தில் இருந்து மீட்டு வீட்டுக்கு அனுப்பினர்.